செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
f3a518d6-b5b7-4d32-b02f-d6e57352c8b0
-

மரணத்திற்கு காரணம் மாரடைப்பு; கொவிட்-19 தடுப்பூசி அல்ல

கொவிட்-19 தடுப்பூசியை மார்ச் 5ஆம் தேதி முதன்முதலாக போட்டுக்கொண்ட 57 வயது ஆடவர் ஒருவர் அடுத்த நாளன்று மாண்டுவிட்டார். இதற்கு மாரடைப்பே காரணம் என்றும் தடுப்பூசிக்கும் அவரின் மரணத்திற்கும் தொடர்பு இல்லை என்றும் சுகாதார அமைச்சு நேற்று தெளிவு படுத்தியது.

மரணமடைந்தவர் ஃபைசர் பயோஎன்டெக் தடுப்பூசியை முதல் தவணையாகப் போட்டுக்கொண்டு இருந்தார். அந்தத் தடுப்பூசி காரணமாக அவருக்கு மரணம் ஏற்பட்டு இருக்கிறது என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்பது சுயேச்சையான மருந்தகக் குழு ஒன்றின் மதிப்பீடுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ள தாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டும் விசாக தின கொண்டாட்டங்கள் இணையத்தில்

கொவிட்-19 நிலவரம் காரணமாக நாளை விசாக தினக் கொண்டாட்டங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. அவை இணையத்தில் இடம்பெற உள்ளன. கொவிட்-19 தொற்றுக்கு முன்பு விசாக தினத் தன்று ெபளத்தர்கள் ஆலயத்திற்குச் செல்வார்கள். பகல் நேர வழிபாடுகளில் கலந்துகொள்வார்கள். சென்ற ஆண்டு விசாக தினத்தன்று இங்கு முடக்கம் நடப்பில் இருந்தது.

பாதுகாப்பு இடைவெளி கட்டுப்பாடுகள் போன்றவை இந்த ஆண்டிலும் நடப்பில் இருப்பதால் பக்தர்களுக்காக வழிபாட்டு நிகழ்ச்சிகளை நாளை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்ப சிங்கப்பூர் பௌத்த கூட்டமைப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதனிடையே, கலாசார, சமூக இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் ஞாயிற்றுக்கிழமை கேலாங்கில் இருக்கும் அந்தக் கூட்டமைப்புக் கட்டடத்திற்குச் சென்றார்.

இப்போதைய சூழ்நிலையை அந்தக் கூட்டமைப்பினரிடம் எடுத்துச் சொல்லி விளக்கி புரிந்துணர்வுக்காகவும் தலைமைத்துவ பணிக்காகவும் அவர்களுக்குத் தான் நன்றி தெரிவித்ததாக ஃபேஸ்புக்கில் அமைச்சர் கூறினார்.

வழக்கமாக விசாக தினத்தன்று ஆயிரக்கணக்கான பௌத்தர்கள் ஆலயங்களுக்குச் சென்று பல்வேறு வழிபாடுகளிலும் ஈடுபடுவார்கள். என்றாலும் அந்தக் கொண்டாட்டங்களை இந்த ஆண்டிலும் குறைத்துக் கொண்டு இணையத்தில் அவற்றை இடம்பெறச் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

உணவு, பானத் துறை

மோசமாகப் பாதிப்பு

சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று கட்டுப்பாடுகள் மே 16 முதல் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக குறிப்பாக உணவு, பான நிறுவனங்கள் படுமோசமாகப் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

ஜூ சியாட் பிளேசில் புதிதாக திறக்கப்பட்டு உள்ள 'அசடோர் சிங்கப்பூர்', கிளப் ஸ்திரீட்டில் புதிதாக தொடங்கி இருக்கும் 'லோ டைட்' ஆகிய புதிய உணவு, பானத் துறை நிறுவனங்களுக்கு நிலைமை இன்னும் மோசமாகி இருக்கிறது. அங்கு விற்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லத்தான் முடியும். அங்கு அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தத் தொழில்துறையினர் சென்ற ஆண்டும் இதே நிலையைச் சந்தித்தனர். உடற்பயிற்சிக் கூடங்கள், கல்வி போதனை, செறிவூட்டல் நிலையங்கள் போன்ற இதர துறைகளும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன என்றாலும் உணவு, பானத் துறை படுமோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிகிறது.

இரண்டாம் கட்ட கட்டுப்பாடு நடப்புக்கு வந்த சில நாட்களில் உணவு, பான நிறுவனங்களுக்குப் பொதுவாக 40%லிருந்து 90% வரை விற்பனை குறைந்துவிட்டதாக சிங்கப்பூர் உணவக உரிமையாளர் சங்க பேச்சாளர் தெரிவித்தார். இப்போது உறுப்பினர்கள் பலரும் முன்பை விட வேகமாகச் சூழ்நிலைக்கு மாறிக்கொண்டார்கள்.

என்றாலும் அதனால் உணவு விநியோக விற்பனை அதிகரித்து இருக்கும் என்று அனுமானிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

மெக்டோனல்ட்ஸ் கொண்டாட்ட உணவு விற்பனை ஒத்திவைப்பு

பிடிஎஸ் என்ற பிரபலமான பாப் இசைப் பாடல் குழுவுடன் சேர்ந்து மெக்டோனல்ட்ஸ் நிறுவனம் தொடங்க இருந்த கொண்டாட்ட உணவு விற்பனை தாமதமடைகிறது.

இம்மாதம் 27ஆம் தேதி தொடங்க இருந்த விற்பனை ஜூன் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக அந்தத் துரித உணவு நிறுவனம் ஃபேஸ்புக்கில் தெரிவித்து உள்ளது. சிங்கப்பூர் உள்ளிட்ட ஏறத்தாழ 50 நாடுகளில் செயல்படும் தனது கடைகள் அந்தச் சிறப்பு உணவை இந்த வாரம் தொடங்கி விற்பனை செய்யும் என்று சென்ற மாதம் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, மவுண்ட் எலிசபெத் நொவினா மருத்துவமனையைச் சேர்ந்த தொற்றுநோய் வல்லுநரான டாக்டர் லியோங் ஹோ நாம், அந்த விற்பனை பெரும் கூட்டத்தை ஈர்க்கும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தார். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களும் அவர்களில் இருப்பார்கள் என்றார் அவர். பி1617 கிருமி கவலை தரும் ஒன்றாக இருக்கிறது. உருமாறிய கிருமி சிறார்களை அதிகம் பாதிக்கிறது. ஆகையால் கூட்டம் கூடுவதால் தொற்று பரவல் ஆபத்து அதிகம் என்று அவர் கூறினார்.