பொய்யான சம்பள விவர
சம்பவங்கள் அதிகரிப்பு
வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலை நியமனக் கடிதங்களில் குறிப்பிடப்படுவதுபோல சம்பளம் வழங்கப்படுவதில்லை. அதற்கும் குறைவாகவே சம்பளம் வழங்கப்படுகிறது. இந்தப் போக்கு அதிகரித்துள்ளது என்று அரசாங்க சார்பற்ற நிறுவனமான 'ஹோம்' தெரிவித்துள்ளது. இந்த வழக்கம் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. இதன் தொடர்பில் சட்டத்தில் இருந்த ஓட்டைகளை அறிந்த முதலாளிகளும் முகவர்களும் தற்போது அதிகரித்து வருகின்றனர் என்று 'ஹோம்' கூறியது. கடந்த ஆண்டு இது தொடர்பாக 274 வழக்குகளை 'ஹோம்' கையாண்டு உள்ளது. இது, 2019ல் கையாண்ட சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் 24.5 விழுக்காடு உயர்வாகும். எஸ் பாஸ், எம்பிளாய்மண்ட் பாஸ் போன்றவற்றுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஆவணங்களில் சம்பிரதாயத்துக்கு மட்டுமே அந்தச் சம்பளம் குறிப்பிடப்படுகிறது என்று 'ஹோம்' அதிகாரியான லுக் டான் தெரிவித்தார். இதற்கிடையே 2015 முதல் 2019 வரையிலான ஐந்து ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் பொய்யான சம்பள விவரம் தொடர்பான 560 புகார்கள் வந்துள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
ஊழியர்களுக்கு ஆலோசனை
சொந்த நாடுகளில் உள்ள அன்புக்குரியவர்களைப் பற்றி கவலைப்படும் ஊழியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன என்று மனிதவள அமைச்சர் டான்
சீ லெங் கூறியுள்ளார். சென்ற ஞாயிற்றுக்கிழமை மெய்நிகர் வழியாக நடைபெற்ற மே தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசினார். அரசாங்க சார்பற்ற ஹெல்த்சர்வ், வெளிநாட்டு ஊழியர் நிலையம் போன்றவை உதவி தேவைப்படும் ஊழியர்களுக்கு அத்தகைய ஆலோசனைகளை வழங்கி வருகின்றன என்று டாக்டர் டான் சொன்னார். வெளிநாட்டு ஊழியர்களில் பெரும்பாலோர் இந்தியா, பங்ளாதேஷ் நாடுகளைச் சேர்ந்தவர்கள். 'மை பிரதர் எஸ்ஜி' போன்ற இதர அமைப்புகளும் மனிதவள அமைச்சுடன் சேர்ந்து தங்குவிடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு மனநலம் பற்றிய புத்தகங்களை விநியோகித்து வருகிறது.
சாலைக் கட்டணம் $1 குறையும்
கொவிட்-19 கட்டுப்பாடுகளால் போக்குவரத்து குறைந்துள்ளது. இதனால் கட்டணமுள்ள எல்லாச் சாவடி களிலும் மே 27 முதல் ஜூன் 27 வரையில் மின்னியல் சாலைக் கட்டணத்தில் ஒரு வெள்ளி குறைக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தெரிவித்தது.

