முகக்கவசம் அணிய மறுத்த மாது கைது; மேலும் பல குற்றச்சாட்டுகள்

முகக்கவசம் அணிய மறுத்த மாது கைது; மேலும் பல குற்றச்சாட்டுகள்

1 mins read
7ad9f6ec-6cc7-46c9-9955-7f8b93bb226c
மனநலக் கண்காணிப்புக்காக ஃபூன் மனநலக் கழகத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மரினா பே சேண்ட்ஸ் கடைத்தொகுதியில் இம்மாதம் 15ஆம் தேதி முகக்கவசம் அணிய மறுத்த மாது மீது, கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின்கீழ் இன்று (மே 25) மேலும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

ஃபூன் சியு யோக், 53, எனும் அந்த மாது, தொற்றுநோய்த் தடுப்புச் சட்டத்தின்கீழும் ஒரு குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.

சிங்கப்பூரரான ஃபூன் இன்று கைது செய்யப்பட்டதாக போலிசும் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையமும் கூட்டறிக்கை மூலம் தெரிவித்தன.

கடந்த ஆண்டு ஜூன் 28ஆம் தேதி பிரிட்டனில் இருந்து ஃபூன் சிங்கப்பூர் வந்ததாகவும் ஹோட்டலில் 14 நாள் கட்டாயத் தனிமையில் இருந்தபோது முகக்கவசமின்றி பலமுறை அவர் தமது அறையைவிட்டு வெளியே சென்றதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

அத்துடன், கடந்த டிசம்பர் 2ஆம் தேதியிலிருந்து இம்மாதம் 24ஆம் தேதிவரை குறைந்தது நான்கு முறை பொது இடங்களில் அவர் முகக்கவசம் அணியத் தவறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கிளார்க் கீ சென்ட்ரல், பிராஸ் பசா கடைத்தொகுதி ஆகிய இடங்கள் அவற்றில் அடங்கும்.

இம்மாதம் 15ஆம் தேதி போலிஸ் அவரை விசாரித்ததாகவும் அதற்கு ஒன்பது நாட்களுக்குப் பின் நீதிமன்றத்தைவிட்டு வெளியேறிய போது முகக்கவசம் அணியத் தவறிய குற்றத்தை அவர் மீண்டும் இழைத்ததாகவும் அக்கூட்டறிக்கை குறிப்பிட்டது.

மனநலக் கண்காணிப்புக்காக ஃபூன் மனநலக் கழகத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார். அவர் மீதான வழக்கு ஜூன் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்