முகக்கவசம் அணிவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள 53 வயதான பூன் சியூ யோக் (படம்) எனும் மாது நேற்று நீதிமன்றத்துக்கு அருகில் வரும் வரை முகக்கவசம் இன்றிக் காணப்பட்டார். நீதிமன்ற வாயிலுக்கு அருகில் சென்றபோது அவர் முகக்கவசம் அணியத் தொடங்கியதைக் காண முடிந்தது. இம்மாதம் 15ஆம் தேதி மெரினா பே சேண்ட்சில் முகக்கவசம் அணிய மறுத்ததையும் அங்கிருந்த பாதுகாப்பு இடைவெளி தூதுவரிடம் தகராற்றில் ஈடுபட்டதையும் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்
பட்டது. அதன் தொடர்பில் அன்றைய தினம் மாலை 5.15 மணியளவில் உதவி கோரி போலிசுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி இரவு 7.20 முதல் 8 மணிக்கு உட்பட்ட நேரத்தில் நியூட்டன் உணவங்காடி நிலையத்தில் 'எல்லா நேரத்திலும்' முகக்கவசத்தை சரிவர அணியாமல் இருந்ததாக அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கில் முன்னிலையாக அவர் நேற்று நீதிமன்றத்துக்கு வந்தார்.
நீதிமன்ற நடைமுறைகளின்போது முகக்கவசத்தை அவர் அகற்ற முயற்சி செய்தபோது, மாவட்ட நீதிபதி ஏ. சங்கீதா, நடைமுறைகள் முடியும் வரை முகக்கவசத்தைத் தொடர்ந்து அணிந்திருக்க உத்தரவிட்டார்.

