மனிதவள அமைச்சு மேற்கொண்ட சோதனைகளில் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யக்கூடிய ஊழியர்களை அவ்வாறு செய்யச் சொல்லாது வேலையிடங்களில் அவர்கள் ேவலை செய்ய அனுமதித்தது தொடர்பாக 11 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 8ஆம் தேதியிலிருந்து 21ஆம் தேதி வரை அமைச்சு மேற்கொண்ட சோதனைகளில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் அமைச்சு 530க்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்டது.
முதல் தடவை இந்தக் குற்றம் புரிவோருக்கு $1,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. மறுமுறை அபராதம் புரிந்தால் $2,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சு கூறியுள்ளது.
இதன் தொடர்பில் அமைச்சு இம்மாதம் 4ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்று கூறியது.
கொவிட்-19 கொள்ளைநோயை முறியடிக்க எடுக்கப்படும் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளின் ஓர் அம்சம் என்றும் அதில் அமைச்சு தெரிவித்திருந்தது.
அதன்படி, ஒருவரின் வேலை முறை காரணமாக அவரால் வீட்டிலிருந்தபடி வேலை செய்ய இயலாது என்ற நிலை இருந்தால் மட்டுமே அவர்கள் வேலையிடங் களுக்குச் சென்று வேலை செய்ய வேண்டும் என்று அமைச்சு அதில் நினைவூட்டியது.
இதன் தொடர்பில், வேலையிடங்களில் பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை இம்மாதம் 28ஆம் தேதிக்குள் நிறுவனங்கள் அமைச்சுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அது கூறியிருந்தது. இதில் மாற்றம் ஏதும் செய்யப் பட்டால் அவற்றை உடனுக்கு உடன் அமைச்சுக்குத் தெரிவிக்க வேண்டு மென்றும் அது விளக்கமளித்திருந்தது.
"ஊழியர்கள் எண்ணிக்கை என்னவாக இருந்தாலும், வீட்டிலிருந்தபடியே வேலை செய்யக்கூடிய அனைவரும் அவ்வாறே செய்வதை உறுதிசெய்வது முதலாளிகளின் பொறுப்பு," என்று அமைச்சு தெரிவித்தது.
வேலையிடங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை மீறாமல் இருந்தாலும் வீட்டிலிருந்து வேலை செய்யக் கூடிய ஊழியர்கள் வீட்டிலிருந்துதான் வேலை செய்ய வேண்டும். இந்த விதியை மீறும் முதலாளிகள் தண்டிக்கப்படுவர் என்று அமைச்சு தெளிவுபடுத்தியது.
அத்துடன், வேலையிடங்களில் பணிபுரியும் ஊழியர்கள் போதுமான பாதுகாப்பு தூர இடைவெளி நட வடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதில் மாறுவேலை நேரம், நீக்குப்போக்கான வேலை நேரம், சமூக ஒன்றுகூடலுக்குத் தடை, ஒரு வேலையிடத்திலிருந்து இன்னொரு வேலையிடத்துக்கு ஊழியர்களை அனுப்பாமல் இருப்பது போன்றவை அடக்கம்.
மேலும், அனைத்து நேரங்களிலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று நினைவுறுத்தப் படுகிறது.

