டெளன்டவுன் தடத்தில் செல்லும் ரயிலில் ஞாயிறன்று சக பயணியைக் கொடூரமாகத் தாக்கி யவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொது வெளியில் தொல்லை கொடுத்ததற்காக தற்பொழுது கைது ெசய்யப்பட்டுள்ள அந்த ஆடவர் மீது வேண்டுமென்றே கடுமையான காயம் விளைவித்த குற்றத்திற்காகவும் விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் காவல்துைறயினர் வெளியிட்ட அறிக்கையில், தாக்குதல் நடத்தியவருக்கும் தாக்கப்பட்டவருக்கும் இடையே நீண்ட வாக்குவாதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல் குறித்து ஞாயிறு காலை சுமார் 10.15 மணிக்கு தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
ஆனால், அதன் அதிகாரிகள் அங்கு சென்றடைவதற்குள் சம்பந்தப்பட்டவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளியில், கீழே விழுந்துகிடந்தவர் மீது, ஆடவர் ஒருவர் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்துவது தெரியவந்தது. அச்சமயம் ரயில் ரோச்சோர் நிலையத்தை ெசன்றடைந்தது.
அதில் தாக்கப்பட்டவர் கீழே விழுந்த நிலையில் அவரிடமிருந்து முனகல் சத்தம் கேட்டது தெரிய வந்தது.
தற்பொழுது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைதாகியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கருத்துரைத்த எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவன தொடர்புத் துறையைச் சேர்ந்த மூத்த துணைத் தலைவர் திருவாட்டி டேமி டான், புக்கிட் பாஞ்சாங் நிலையத்தை நோக்கிச் செல்லும் ரயில் வண்டியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் குறிப்பிட்டார்.
இதைக் கேள்விப்பட்ட எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவன ஊழியர் அங்கு உடனே சென்றதாகவும் "தாக்கப்பட்டவர் தனியாக இருப்பதைக் கண்டு மருத்துவ உதவி தேவையா என்று கேட்டதாகவும் திருவாட்டி டேமி கூறினார்.
"அதற்கு தாக்கப்பட்டவர் தமக்கு மருத்துவ உதவி எதுவும் தேவையில்லை என்றும் தம்மைத் தாக்கியவர் ரயில் வண்டியை விட்டு இறங்கிச் சென்றுவிட்டார் என்றும் தெரிவித்தார். அவர் தாம் நலமுடன் இருப்பதாக மீண்டும் கூறியதுடன் பயணத்தைத் தொடர்ந்தார்," என்று கூறினார்.
ரயிலில் பாதுகாப்புக்காகப் பொருத்தப்பட்டிருக்கும் புகைப்படக் காட்சிகளை காவல்துறையினரின் விசாரணைக்கு எஸ்பிஎஸ் கொடுத்து உதவும் என்றும் திருவாட்டி டேமி குறிப்பிட்டார்.

