மனைவியைப் பிசாசு என்று கற்பனைசெய்து கொன்ற ஆடவருக்கு பத்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி, செங்காங்கில் உள்ள எஸ்பரீனா கூட்டுரிமை அடுக்குமாடி வீட்டில் கொலை நடந்தது.
49 வயது ஆஸ்திரேலியரான பவுல் லெஸ்லி குவர்க், 'ஸ்கிட்ஸோஃப்ரினியா' மனக்கோளாற்றால் பாதிக்கப்பட்டு அதற்கு மருந்து உட்கொண்டு வந்தவர்.
சிங்கப்பூரரான அவரது மனைவி திருவாட்டி கிறிஸ்டீனா கூ கெக் குவா என்பவரைக் கொல்லும்படி அவருக்கு காதில் ஒலித்ததாகக் கூறப்பட்டது.
மனைவியைத் தற்காப்புக் கலைக்குப் பயன்படுத்தும் கம்பால் அடித்தும் கழுத்தில் கத்தியால் குத்தியும் கொன்றார் குவர்க்.
அவர்களது 10 மாத செல்ல நாயைக் கத்தியால் குத்தி 3வது மாடியிலிருந்து வீசினார்.
'பிசாசை' மீண்டும் உயிர்த்தெழ வைக்கும் 'ஆவி', நாய் உருவில் இருந்தது என்று அவர் நம்பினார். போலிஸ் அவ்விடம் வந்தபோது, அவர் ரத்தத்தில் நனைந்திருந்தார். தான் 'ஏசு கிறிஸ்து' என்று குவர்க் போலிசாரிடம் கூறினார்.
நோக்கமில்லாத மரணத்தை விளைவித்த குற்றத்த்தை ஒப்புக்கொண்ட அவருக்கு, 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மனக் கோளாற்றால் அவரது செயல் களுக்காக மனதளவில் பொறுப்பு வகிக்கும் தன்மை குறைந்ததாக அவர் மீதான மனோவியல் சோதனைகள் காட்டின. அதனால் கொலைக்குற்றம் நோக்கமில்லாத மரணக் குற்றச்சாட்டாகக் குறைக்கப்பட்டது.
கொலைக்கு முந்திய நான்கு மாதங்களாக, குவர்க், ஸ்கிட்ஸோஃப்ரினியா நோய்க்கான மருந்தைக் குறைத்துக்கொண்டார் என்றும் அதனால் நோய் மீண்டும் தலையெடுத்தது என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
நீண்டகால அனுமதியில் சிங்கப்பூரில் வசித்து வரும் குவர்க், பொங்கோல் பலதுறை மருந்தகத்தில் பாதநோய் சிகிச்சை நிபுணராகப் பணியாற்றினார்.
திருவாட்டி கூ, அமெரிக்காவைச் சேர்ந்த நிர்வாக ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
குவர்க்கின் முதல் மனைவிக்குக் கொடுக்க வேண்டிய ஜீவனாம்சத் தொகையால் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கொலை நடந்த அன்றும் வாக்குவாதம் நடந்ததாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

