சட்டத்துறை மாணவர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் வழிகாட்டுதல் வழங்குவதாகக் கூறி அவர்களுக்காக இணையத்தளத்தை நடத்திவந்த வழிக்கறிஞரை சிங்கப்பூர் வழக்கறிஞர்கள் சங்கம் கண்டித்திருக்கிறது.
அதனைப் பதிவு செய்து நடத்தியவர் திரு ஆங் சொங் யீ எனும் வழக்கறிஞர். ஆங், பொதுமக்கள் நலனுக்கு மாறாக நடந்ததாகவும் தவறான தகவல்களைத் தந்ததாகவும் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான அரசிதழில் கூறப்பட்டது.
வழக்கறிஞருக்கும் கவுரவம் மிக்கத் தொழில் செய்பவருக்கும் உரிய ஏற்பில்லாத, தவறான நடத்தையில் ஈடுபட்டதாக அவர் கண்டிக்கப்பட்டார்.
திரு ஆங் இன்னமும் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார் என்று இணையத்தகவல்கள் கூறுகின்றன.
கடந்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி www.lawmentors.sg எனும் முகவரியில் இயங்கிய அந்த இணையத்தளம் பற்றி தகவல் பரவியது. அன்றே அது முடங்கியது.
கொவிட்-19 கிருமிப் பரவல், சட்டத் துறையின் குறுகல் ஆகியவற்றால் சட்டத் துறை பட்டதாரிகள் வழக்கறிஞர்களாகப் பணியாற்றும் வாய்ப்புகள் குறைந்து வருவதாக அந்த இணையத்தளம் கூறியது. குறிப்பாக, புதிய வழக்கறிஞர்களில் 65 விழுக்காட்டினருக்கு வேலை கிடைக்காது என்று இணையத்தளத்தில் கூறப்பட்டது.
அதனால், மாணவர்கள் சட்ட நிறுவனங்களில் வேலைகளையும் பணியிடப் பயிற்சியையும் பெற உதவுவதாகக் கூறி, அதிகக் கட்டணம் உள்ள வழிகாட்டுதல் திட்டத்தை இணையத்தளம் முன்வைத்தது.
அதற்கான கட்டணமாக ஆரம்பகட்ட வழக்கறிஞர்களின் ஒன்றரை முதல் இரண்டு மாதச் சம்பளம் வரை பெறப்படும் என்றும் அது கூறியது.
சட்டத் துறைப் பட்டதாரி ஒருவரின் சராசரி மாதச் சம்பளம் என்று கல்வி அமைச்சு கடந்தாண்டு நடத்திய பட்டதாரி வேலைவாய்ப்பு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய இங்குள்ள சில சட்ட நிறுவனங்கள், அந்த இணையத்தளம் பயத்தைக் கிளப்பும் சந்தர்ப்பவாத முயற்சி என்று கூறின.
சிங்கப்பூர் வழக்கறிஞர்கள் சங்கம் அந்த இணையத்தளம் முன்வைத்தது சான்றுகள் இல்லாத ஊகங்கள் என்று கூறியிருந்தது.

