செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
4a2b85a9-5d8c-4cac-9213-57b7bb27aa1f
-

உணவக ஊழியர் மீது துப்பிய மாதுக்கு நன்னடத்தை உத்தரவு

கடந்த ஆண்டு கேஎஃப்சி ஊழியர் மீது காறித் துப்பிய காணொளியில் சிக்கிக்கொண்ட பெண், ஒன்பது மாதங்கள் நன்னடத்தை கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

43 வயது லின் சி டிங் (படம்) ஊழியருக்குத் தொல்லை கொடுத்தாகவும் அவர் மீது வன்முறையைப் பயன்படுத்தியதாகவும் இரண்டு குற்றச்சாட்டைகளை முன்னதாக ஒப்புக்கொண்டிருந்தார். கொவிட்-19 கட்டுப்பாடுகளை மீறிய குற்றச்சாட்டு ஒன்றும் தண்டனை விதிக்கப்பட்டபோது கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்தாண்டு ஏப்ரல் 22ஆம் தேதி, நெக்ஸ் கடைத்தொகுதியில் உள்ள கேஎஃப்சி விரைவு உணவகத்துக்குச் சென்ற லின், தமக்கு உணவு உடனே கிடைக்கவேண்டும் என்று கூறியுள்ளார். காத்திருக்க வேண்டும் என்று தெரிந்ததும், லின் தாம் செலுத்திய பணத்தைத் திரும்பக் கேட்டு பிரச்சினை செய்தார். ஒரு கட்டத்தில் ஊழியரை தகாத வசைச் சொற்களில் ஏசிவிட்டு அவர் மீது எச்சில் துப்பினார் லின்.

லின்னுக்கு 'ஸ்கிட்ஸோஃப்ரினியா' எனும் மனக் கோளாறு உள்ளதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. இருப்பினும் அவர் கட்டாய சிகிச்சை உத்தரவைப் பெறத் தகுதியானவர் என்று கருதப்படவில்லை.

போலிசை தவிர்க்க முயன்று கார்விபத்தில் சிக்கியவர் கைது

போக்குவரத்து போலிசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக விரைவுச்சாலையில் காரில் ஓட்டம் பிடிக்க முயன்று, அதனை விபத்துக்குள்ளாக்கிய 18 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை அதிகாலை தெம்பனிஸ் விரைவுச்சாலையில் சம்பவம் நடந்தது.

தெம்பனிஸ் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலையில் கண்காணிப்புப் பணியில் இருந்த போக்குவரத்து போலிசார் ஒரு வாகனத்தை நிறுத்தும்படி கூறினர். நிறுத்தாமல் வேகம் எடுத்த காரைப் போலிசார் அதனைத் துரத்திச் சென்றனர்.

இறுதியில், பொங்கோல் வே சாலை நடுவில் இருந்த தடுப்பில் கார் மோதி நின்றது. அதில் இருந்த 21 வயது பயணி மருத்துவமனைக்குச் கொண்டு செல்லப்பட்டார். அலட்சியமாக கார் ஓட்டி கடுமையாகக் காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 18 வயது ஓட்டுநரை போலிசார் கைது செய்தனர். வாகனமோட்டும் உரிமம் இல்லாமல் கார் ஓட்டியது உள்ளிட்ட போக்குவரத்துக் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் அவர் மீது விசாரணை நடந்துவருகிறது.

வாகனமீட்பு இயந்திரங்களின் உதவியுடன் பயணி மீட்கப்பட்டதாக போக்குவரத்து போலிசார் கூறினர்.