மேலும் ஏழு புதிய கல்வி அமைச்சுப் பாலர் பள்ளிகள் 2024, 2025 ஆண்டுகளில் தொடக்கப்பள்ளி வளாகங்களில் திறக்கப்படும்.
பாலர் ஆண்டு ஒன்றில் ஒவ்வொரு பள்ளியும் சுமார் 100 முதல் 120 இடங்களை ஒதுக்கும் என்று கல்வி அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
பாலர் பள்ளிகள் திறக்கப்படும் ஆண்டுக்கு முந்தைய ஆண்டு பிப்ரவரி மாதம் அவற்றில் சேர்வதற்கான முன்பதிவு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
"நமது கல்வி அமைச்சு பாலர் பள்ளிகளின் எண்ணிக்கையைத் தொடர்ந்து அதிகரிப்பதன் மூலம் மேலும் அதிகமான சிங்கப்பூரர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் தரமான பாலர் பள்ளிப் படிப்பு கிடைப்பதை உறுதிசெய்ய முடியும்," என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நேற்று தமது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்திருந்தார்.
இப்புதிய ஏழு பாலர் பள்ளிகளையும் சேர்த்து மொத்தம் 57 கல்வி அமைச்சு பாலர் பள்ளிகள் செயல்படும் என்று கூறப்படுகிறது.
இதன்படி, 2025ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 7,900 முதலாம் பாலர் ஆண்டு மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் என்று கல்வி அமைச்சு கூறியுள்ளது.
தற்போது 36 கல்வி அமைச்சு பாலர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு மேலும் எட்டு புதிய பள்ளிகளும் 2023ல் ஏழு புதிய பள்ளிகளும் அப்பட்டியலில் சேர்க்கப்படும்.
கல்வி அமைச்சின் கீழ் செயல்படும் அனைத்து பாலர் பள்ளிகளும் தமிழ், மலாய், சீனம் ஆகிய மூன்று தாய்மொழிப் பாடத்திட்டங்களையும் கொண்டிருக்கும். இதனால், பிள்ளைகளின் ஆரம்பகால ஆண்டுகளில் இரு மொழித் திறனை ஊக்குவிக்க முடிவதுடன் பிந்தைய ஆண்டுகளுக்கான மொழிக் கற்றலுக்கும் வலுவான அடித்தளமிட முடியும் என்று தெரிவித்தது அமைச்சு.
தங்களின் பாலர்கள் தொடக்கப்பள்ளி ஒன்றில் சுமுகமாக அடியெடுத்து வைப்பதற்கு ஆதரவாக, பாலர் பள்ளி அமைந்துள்ள அந்தந்த தொடக்கப்பள்ளியுடன் அணுக்கமாக இணைந்து செயல்படுவதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டது.
தங்களின் பிள்ளைக்கு முழுநேரப் பராமரிப்புச் சேவை தேவைப்படும் நிலையில் உள்ள பெற்றோருக்காக அனைத்து கல்வி அமைச்சு பாலர் பள்ளிகளிலும் சிறுவர் பராமரிப்புச் சேவையும் வழங்கப்படுகிறது.
இச்சேவை திங்கள் முதல் வெள்ளி வரை காலை ஏழு மணி தொடங்கி மாலை ஏழு மணிக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
கெஷரினா, தஞ்சோங் காத்தோங், யாங்ஸெங், பொங்கோல், சவுத் வியூ தொடக்கப்பள்ளிகளில் 2024ஆம் ஆண்டில் புதிய பாலர் பள்ளிகள் திறக்கவுள்ளன. 2025ஆம் ஆண்டில் இலியாஸ் பார்க், ஹவ்காங் தொடக்கப்பள்ளிகளில் பாலர் பள்ளிகள் செயல்படத் தொடங்கும்.