புக்கிட் மேரா, கேலாங், உட்லண்ட்ஸ், தெங்கா வட்டாரங்களில் வீவக திட்டங்கள்
புதிதாக 3,879 தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடுகளை நேற்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) விற்பனைக்கு அறிவித்தது. நான்கு குடியிருப்பு வட்டாரங்களில் அமைந்துள்ள நான்கு வீடமைப்புத் திட்டங்களின் கீழ் இவ்வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளதாக கழகம் நேற்று தெரிவித்தது.
இந்த பிடிஓ வீடுகளைத் தவிர 2,494 மீதமிருக்கும் வீடுகளும் விற்பனைக்கு வந்துள்ளன.
மொத்தம் 6,373 புதிய வீடுகள் நேற்று விற்பனைக்கு வந்தன.
முதிர்ச்சியடைந்த புக்கிட் மேரா வட்டாரத்தில் கட்டப்படும் 'தெலுக் பிளாங்கா பீக்கன்', 'பிடிஓ' திட்டங்கள் ஆகக் குறைந்த வீடுகளுடையது. இங்கு 175 மூவறை, நான்கறை வீடுகள் விற்பனைக்கு உள்ளன. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு புக்கிட் மேராவில் புதிய வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளது இதுவே முதல் முறை.
மானியங்களின்றி மூவறை வீடு ஒன்றின் விலை $419,000ல் தொடங்கும். நான்கறை வீட்டின் விலை குறைந்தது $602,000 ஆகும். வீவகவின் விற்பனைத் திட்டத்தின் ஆக விலை உயர்ந்த வீடுகள் இவை எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இவ்வீடுகளை வாங்க விரும்புவோர், ஐந்தாண்டுகளுக்கு மேல் காத்திருக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. கொரோனா கிருமிப் பரவல் சூழலுக்கு முன்பாக பிடிஓ வீடுகள் தயாராவதற்குச் சுமார் மூன்று முதல் நான்கு ஆண்டுகளே ஆனது.
வீவகவின் மே மாத விற்பனைத் திட்டத்தின்கீழ் கேலாங் வட்டாரத்தில் 'மெக்பர்சன் வீவ்' வீடுகளும் விற்பனைக்கு வந்துள்ளன. நீக்குப்போக்கான ஈரறை வீடுகள், மூவறை வீடுகள், நான்கறை வீடுகள் என மொத்தம் 1,382 வீடுகள் இங்கு விற்பனைக்கு வந்துள்ளன. 2026ன் முதல் காலாண்டில் இவ்வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் 1,540 வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஏழு புளோக்குகளில் 15 முதல் 25 மாடிகள் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மூவறை வீட்டுக்கு $185,000, நான்கறை வீட்டுக்கு $275,000, ஐந்தறை வீட்டுக்கு $372,000 என்று வீட்டு விலை தொடங்கும் பட்சத்தில் மே மாத விற்பனைத் திட்டத்திலேயே ஆக விலைகுறைந்த வீடுகள் இவை என்று கூறப்படுகிறது. இவை 2025ன் மூன்றாவது காலாண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்.
சிங்கப்பூரின் ஆகப் புதிய பகுதியான தெங்காவில் 782 வீடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. வீடுகள் 2025ன் மூன்றாம் காலாண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஜூரோங் ஈஸ்ட், ஈசூன், மரின் பரேட், குவீன்ஸ்டவுன், கிளமெண்டி உட்பட முதிர்ச்சியடைந்த, முதிர்ச்சியடையாத வட்டாரங்களில் விற்பனையாகாத 2,494 வீடுகளும் நேற்று விற்பனைக்கு வந்தன.
இவ்வீடுகளில் சுமார் 28% கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. கட்டுமானத் துறையில் மனிதவளத் தட்டுப்பாடு ஏற்பட்டு, பிடிஓ திட்டங்கள் முடிவடையும் நாள் தள்ளிப்போவதால் இம்முறை மக்களிடையே மீதமிருக்கும் வீடுகள் பிரபலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பங்களை அடுத்த திங்கட்கிழமை இரவு 11.59 மணிக்குள் வீவகவின் இணையவாசல் மூலம் சமர்ப்பித்திட வேண்டும். கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் வீடு வாங்க விரும்புவோர், வீவக மையத்தையோ வீவக கிளைகளையோ நேரடியாக அணுகாமல் இணையம் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

