சமூக அளவில் 18 பேர், வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் மூவர் உட்பட சிங்கப்பூரில் நேற்று புதிதாக 30 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. உள்ளூரில் கிருமி தொற்றிய 21 பேரில், 15 பேர் முன்னதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
எஞ்சிய அறுவருக்கும் தொடர்பு ஏதும் கண்டறியப்படவில்லை.
முன்னதாக கிருமித்தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்த அந்த 15 பேரில் எட்டுப் பேர் ஏற்கெனவே தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுவிட்டனர்.
எஞ்சிய எழுவருக்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட கிருமித்தொற்று பரிசோதனையில் தொற்று உறுதியானது. இதுபோக, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த ஒன்பது பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் மூவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 61,890 ஆகியுள்ளது.
ஊழியர்கள், உணவு விநியோக ஓட்டுநர் தொடர்பில் ஆறு கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்களை சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் அறிவித்ததை அடுத்து, 'பீட்சா ஹட்' அதன் மூன்று கிளைகளை இரண்டு வாரங்களுக்கு மூடிவிட்டது.
கிருமிப் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொங்கோல் பிளாஸா, ஹேவ்லாக் II, வெஸ்ட்கேட் ஆகிய இடங்களில் உள்ள அதன் கிளைகளை பீட்சா ஹட் மூடி, சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொண்டது.

