சிங்கப்பூருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே மின்னிலக்க ஒப்பந்தம் ஒன்று செய்துகொள்ளப்பட்டால், மின்னிலக்கத் தடுப்பூசி சான்றிதழ்கள் தொடர்பிலான தரநிலைகளை ஒருங்கிணைக்க அது உதவும் என்றும் வெளிநாட்டுப் பயணங்கள் மேலும் எளிதாகும் என்றும் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் நேற்று கூறினார்.
மின்னிலக்க முறையில் அடையாளம் கண்டு வர்த்தகங்கள் தங்களின் வாடிக்கையாளர்களை எளிதில் கண்டறியவும் இது உதவும் என்றார் திரு கான். சுவீடன்-தென்கிழக்காசிய வர்த்தக மாநாடு 2021ல் அவர் இவ்வாறு பேசியிருந்தார்.
கொவிட்-19 நெருக்கடியிலிருந்து மீண்டுவரும் நிலையில் மின்னிலக்கமயமாவதிலும் மின்னிலக்க வர்த்தகத்திலும் இரட்டிப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இதனால் முதலீடு, வளர்ச்சி தொடர்பில் குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் ஏற்படும் என்று கூறிய அவர், கொவிட்-19க்குப் பிந்திய உலகில் அமையவிருக்கும் புதிய வேலைச் சூழலுக்குத் தேவையான வசதிகளையும் இது ஏற்படுத்தித் தரும் என்றார்.
இதற்கிடையே, மின்னிலக்கமய உலகில் மீண்டுவரும் உள்ளூர் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் தொடர்ந்து ஆதரவு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீடித்த, நிலைத்தன்மை தொடர்பான வர்த்தகங்கள் தொடர்பில் சிங்கப்பூர், சுவீடன் நிறுவனங்களுக்கும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் கூறினார்.

