ஃபைசர் நிறுவனத்தின் கொவிட்-19 தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி செல்சியஸுக்கு இடைப்பட்ட சாதாரண குளிர்பதனப் பெட்டி வெப்பநிலையில் ஒரு மாத காலம் வரை சேமித்து வைத்திருக்க சுகாதார அறிவியல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
சிங்கப்பூரின் தேசிய அளவிலான தடுப்பூசித் திட்டத்தை ஒருங்கிணைக்க இந்த நடவடிக்கை உதவும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகத் துறை கடந்த வாரம் இதுபோன்ற முடிவு எடுத்திருந்ததைத் தொடர்ந்து சுகாதார அறிவியல் ஆணையம் இதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பரில் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடுப்பூசியைச் சேமித்து வைப்பதற்கான நிபந்தனைகள் கடுமையானதாக இருந்தன.
உறைநிலைக்குக் கீழ் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தடுப்பூசியைச் சேமித்து வைக்க வேண்டியிருந்தது. சாதாரண குளிர்பதனப் பெட்டியின் வெப்பநிலையில் ஐந்து நாட்கள் வரை சேமித்து வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஃபைசர் தடுப்பூசியைச் சாதாரண உறைவூட்டி வெப்பநிலையில் (உறைநிலைக்குக் கீழ் 20 டிகிரி செல்சியஸ்) இரு வாரங்கள் வரை சேமித்து வைக்கலாம் என்று சுகாதார அறிவியல் ஆணையம் பிப்ரவரியில் தெரிவித்திருந்தது.

