கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறிய உள்ளூர் நடிகர் டெரன்ஸ் சாவ் குவோஹுவிவுக்கு $3,500 அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் மாதத்தில் அவரது வீட்டில் 12 பேர் ஒன்றுகூடியதால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பிரேடல் சாலை அருகில் உள்ள டேசி சாலையில் அமைந்திருக்கும் தமது கொண்டோமினியம் வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்ததை 53 வயது சாவ் ஒப்புக்கொண்டார்.
இரண்டாம் கட்ட கட்டுப்பாடு நடப்பில் இருந்தபோது இந்த விருந்து நிகழ்ந்தது. அதிகபட்சம் ஐந்து பேர் மட்டும் ஒரே இடத்தில் ஒன்றுகூட அப்போது அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் சாவ் தண்டனை விதிக்கப்பட்ட கடைசி நபராவார்.
சாவ்வின் வீட்டிற்குச் சென்ற விருந்தினர்களில் முன்னாள் சஞ்சிகை ஆசிரியரான 50 வயது லான்ஸ் லிம் சீ கியோங்கும்
ஒருவர். அந்த ஒன்றுகூடலுக்கு லிம் நான்கு பேரை அழைத்தார். இந்தக் குற்றத்துக்காக கடந்த வாரம் அவருக்கு $3,000 அபராதம் விதிக்கப்பட்டது. முதலில் தமக்கும் ஐந்து பேருக்கும் சாவ் விருந்து ஏற்பாடு செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சாவ், 30 வயது ஷேன் பாவ் சுன் பிங், 32 வயது ஜெஃப்ரி சூ மிங்ஜியே ஆகிய நடிகர்களின் பிறந்தநாளைக் கொண்டாட இந்த ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் அதன் பிறகு மேலும் நான்கு பேரை லிம் அழைத்ததாகவும் பிறந்தநாளின்போது விருந்தினர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. முகக்கவசம் அணியாமல் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிகமானோர் ஒன்றுகூடியதைக் காட்டும் புகைக்கப் படங்கள் இணையத்தில் வலம் வந்ததைத் தொடர்ந்து, பல அதிருப்திக் குரல்கள் எழுந்தன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி இரவு 9 மணியிலிருந்து பின்னிரவு 1 மணி வரை அந்த 12 பேரும் சாவ்வின் வீட்டில் இருந்தனர்.
லிம்முடன் சேர்த்து ஐந்து
நடிகர்களும் ஐந்து மேலாளர்களும் ஒரு பகுதி நேர விளம்பர
அழகியும் ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர். ஒன்றுகூடலில் கலந்துகொண்ட 11 பேருக்கு $300 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மீடியாகார்ப்பின் புத்தாண்டு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பணியில்
இருந்து சாவ் நீக்கப்பட்டார்.

