காஸாவுக்கு நன்கொடை அளிக்க செஞ்சிலுவைச் சங்கம் அழைப்பு
அண்மையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட காஸாவுக்கு உதவி செய்யும் வகையில் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் நிதிதிரட்டி வருகிறது.
காஸாவில் உள்ள மக்களுக்கு உதவ நன்கொடை அளிக்குமாறு பொதுமக்களை அது கேட்டுக்கொண்டுள்ளது.
திரட்டப்படும் பணம் காஸா மக்களுக்கு தேவையான மருத்துவப் பொருட்கள், உணவு, நிவாரணப் பொருட்கள் போன்றவற்றை வாங்க பயன்படுத்தப்படும் என்று சங்கம் தெரிவித்தது.
துயர் துடைப்பு மையங்களில் தங்கும் பாலஸ்தீனர்களுக்கு இவை விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேலுடனான மோதலில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய குடும்ப உறுப்பினர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் சேவை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக சங்கம் கூறியது.
கடத்தல் முயற்சி முறியடிப்பு
சிங்கப்பூருக்குள் கடத்தப்பட இருந்த ஏறத்தாழ 110 கிலோ பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றில் ஆணுறை போன்ற பாலியல் தொடர்பான பொருட்களும் அடங்கும்.
இந்தக் கடத்தல் முயற்சி இம்மாதம் 15ஆம் தேதியன்று பாசிர் பாஞ்சாங் ஸ்கேனிங் நிலையத்தில் உள்ள குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டது. வீட்டு அலங்காரப் பொருட்கள் என்று அதிகாரிகளிடம் கூறி அப்பொருட்களை சிங்கப்பூருக்குள் கொண்டு வர முயற்சி செய்யப்பட்டது.
அந்தப் பெட்டிகளை ஸ்கேன் செய்து பார்த்துபோது சந்தேகம் எழ, அவற்றைப் பிறித்துப் பார்த்தபோது கடத்தல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
கூடுதல் விசாரணைக்காக இந்த வழக்கு சுகாதார அறிவியல் ஆணையம், சிங்கப்பூர் சுங்கத் துறை ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பெண்ணைத் தாக்கிய மூவருக்கு மனநலப் பரிசோதனை
பதின்மவயது பெண்ணைத் தாக்கி அவருக்கு மரணம் விளைவித்ததாக சந்தேகிக்கப்படும் மூவர் சாங்கி சிறைச்சாலையில் உள்ள மருத்துவ நிலையத்தில் மனநலப் பரிசோதனைக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இம்மாதம் 4ஆம் தேதியன்று இரவு 11 மணி அளவில் புளோக் 602 கிளமெண்டி வெஸ்ட் ஸ்திரீட் 1ல் உள்ள ஒரு வீட்டில் 19 வயது குமாரி ஹுவாங் பாவ்யிங்கை மரக் கழியால் தாக்கி படுகாயம் விளைவித்ததாக 41 வயது சீ மெய் வான், 62 வயது லிம் பெங் தியோங், 29 வயது ஹுவாங் போகான் ஆகிய மூவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றச்சாட்டை எதிர்நோக்கும் ஹுவாங் போகான் தாக்குதல் காரணமாக மாண்ட பெண்ணின் சகோதரராவார்.வேண்டுமென்றே கடுமையான காயங்களை விளைவிக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.குற்றம் சாட்டப்பட்ட சீ, பெண் என்பதால் அவருக்குப் பிரம்படி விதிக்க முடியாது.
பெண்களுக்கு 140க்கும் அதிகமான பொறியியல் வேலை வாய்ப்புகள்
டிபிஎஸ் வங்கி ஏற்பாட்டில் நடைபெறும் மெய்நிகர் வாழ்க்கைத் தொழில் சந்தையில் பெண்களுக்காக 140க்கும் அதிகமான பொறியியல் தொடர்பான வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்களின் தொழில்நுட்பத் திறனை ஆராய இணையம் மூலம் 80 நிமிடங்களுக்கு மதிப்பீடு செய்யப்படுவர்.
இந்த இணையம் வழி மதிப்பீட்டை விண்ணப்பதாரர்கள் அடுத்த மாதம் 8ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மெய்நிகர் வாழ்க்கைத் தொழில் சந்தைக்கு அழைக்கப்படுவர். இந்த மெய்நிகர் வாழ்க்கைத் தொழில் சந்தை அடுத்த மாதம் 12ஆம் தேதியன்று நடத்தப்படும்.
வழங்கப்படும் வாழ்க்கைத் தொழில் மேம்பாட்டுப் பாதைகள் பற்றி அவர்களுக்குக் கூடுதல் தகவல் தரப்படும். அத்துடன் மெய்நிகர் நேர்காணலும் நடத்தப்படும்.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட வாழ்க்கைத் தொழில் சந்தையில் வழங்கப்பட்ட 50 வேலை வாய்ப்புகளுக்கு 500 பெண்கள் விண்ணப்பம் செய்தனர்.

