கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்தபோதும் அதன்பிறகும் தங்களது திருமண வாழ்வில் பெண்களுக்கு அதிக மனநிறைவு இல்லை என்பது ஓர் ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பரவலின்போது குழந்தைப் பராமரிப்பு, வீட்டு வேலை போன்றவற்றில் ஆண்கள், பெண்களின் பங்களிப்பும் அத்தகைய பணிகளில் அவர்கள் செலவிட்ட நேரங்களின் வித்தியாசமும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஆய்வில் பங்குகொண்ட பெற்றோரில் கிட்டத்தட்ட ஐந்து விழுக்காட்டினர் கொரோனா பரவலின்போது வேலையிழந்துவிட்டனர்.
வேலையைத் தக்கவைத்துக்கொண்டாலும் 30% அன்னையரும் 40% தந்தையரும் ஊதியக் குறைப்பை எதிர்கொண்டனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 7 முதல் ஜூன் 1 வரை நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்தபோது, தாய்மார்களின் திருமண வாழ்க்கை மனநிறைவு குறிப்பிடத்தக்க அளவு குறைந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது.
கொரோனா பரவலுக்குமுன் தாய்மார்கள் ஐந்துக்கு 3.9 என்ற அளவில் திருமண வாழ்வில் மனநிறைவு கொண்டிருந்தனர். ஐந்து என்பது முழுமையான மனநிறைவைக் குறிக்கும். நோய்ப் பரவலின்போதும் அதன்பின்னரும் அந்த விகிதம் 3.6ஆகக் குறைந்துவிட்டதாக ஆய்வு முடிவுகள் கூறின.
வீட்டு வேலைகளில் பெரும்பகுதியைத் தாய்மார்கள் தங்கள் தோள்களில் சுமக்க வேண்டியிருந்தது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், லீ குவான் இயூ பொதுக் கொள்கைப் பள்ளியின் துணைப் பேராசிரியர் டாக்டர் டான் போ லின்.
ஆயினும், வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகளால் எழும் முரண்பாடுகளும் கொரோனா பரவல் ஏற்படுத்திய நிச்சயமில்லா நிலையின் விளைவாக ஏற்படும் பதற்றமும் அவர்களின் மனநிறைவைக் குறைத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்தபோது, வீட்டு வேலைகளில் ஆண்-பெண் இடைவெளி அதிகரித்தது என்றும் வருமானத்தைப் பொறுத்து இல்லாமல் அது எல்லாக் குடும்பங்களிலும் காணப்பட்டது என்றும் ஆய்வாளர்கள் கூறினர்.
கொரோனா பரவலுக்குமுன், ஒருநாளில் வீட்டு வேலைக்கு பெண்கள் 68 நிமிடங்களும் ஆண்கள் 53 நிமிடங்களும் செலவிட்டனர்.
நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்தபோது 112 நிமிடங்களும் அதன்பின் 108 நிமிடங்களும் பெண்கள் வீட்டு வேலைகளுக்காகச் செலவிட்டனர். இதே காலகட்டங்களில் ஆண்கள் முறையே 63 நிமிடங்களையும் 66 நிமிடங்களையும் வீட்டு வேலைகளுக்காகச் செலவிட்டனர்.
இந்த ஆய்வு திருமணமான சிங்கப்பூர் பெண்களின் எண்ணிக்கையைப் பிரதிநிதிக்கவில்லை என்ற டாக்டர் டான், ஆனாலும் இது குறிப்பிடத்தக்கது என்றார்.
இம்மாதம் நடந்த அமெரிக்க மக்கள்தொகைச் சங்கத்தின் வருடாந்திர கருத்தரங்கின்போது இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

