ஊழியருக்குத் தொற்று ஏற்பட்டதை அடுத்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
செங்காங் பொது மருத்துவமனையில் பணிமனை பராமரிப்பாளராக வேலை பார்க்கும் 27 வயது ஊழியருக்குத் திங்கட்கிழமை கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அதையடுத்து அந்த ஊழியருடன் அணுக்க தொடர்பில் இருந்த சக ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
கிருமி தொற்றிய ஊழியருக்கு கொவிட்-19 நோயாளி யாருடனும் தொடர்பு கிடையாது.
வேலையில் அவர் எப்போதும் பாதுகாப்பு உடைகளோடும் சாதனங்களோடும் முன்னெச்சரிக்கை நடைமுறைகளை மீறாமல் இருந்து வந்தவர் என்று செங்காங் மருத்துவமனை தெரிவித்தது.
தடமறியும் நடவடிக்கையும் கொவிட்-19 பரிசோதனைகளும் இப்போது நடந்து வருகின்றன.
பல இடங்களையும் முற்றிலும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்துவது போன்ற கூடுதல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு கிருமி தொற்றும் வாய்ப்பைக் குறைக்க கூடுமான அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெற்று இருக்கின்றன என்று மருத்துவமனை கூறியது.
கிருமி தொற்றிய ஆடவர், கடைசியாக சனிக்கிழமை வேலை பார்த்தார். அடுத்த நாள் அவருக்குச் சில அறிகுறிகள் தெரிந்ததை அடுத்து திங்கட்கிழமை பலதுறை மருந்தகம் சென்றார்.
அங்கு அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.
மருத்துவமனையில் நோயாளிகளையும் அவர்களின் குடும்பத்தாரையும் ஊழியர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில் தொடர்ந்து கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கின்றன என்று இந்த மருத்துவமனை ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.
முகக்கவசத்தை முறையாக அணிவது, கைகளைச் சுத்தமாகக் கழுவு வது, சமூகப் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற பலவும் முற்றிலும் பின்பற்றப்படுகின்றன.
கிருமி தொற்றிய அந்த ஆடவர் மலேசியர். அவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்.
இப்போது அவர் இந்த மருத்துவமனையில் தனி வார்டில் இருக்கிறார். உடல்நிலை அவருக்கு நன்றாக இருக்கிறது.
இந்த மருத்துவமனையில் சனிக்கிழமை பரிசோதனை நடத்தப்பட்ட போது அவருக்குத் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
ஆனால் திங்கட்கிழமை தொற்று இருப்பதாகத் தெரியவந்ததை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அதற்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு தொற்று இருக்கிறது என்பது உறுதி யானது.
இதனிடையே, ஜூரோங்கில் ஒரே வளாகத்தில் அமைந்துள்ள இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையும் ஜூரோங் சமூக மருத்துவமனையும் தங்களுடைய அனைத்து ஊழியர்களுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் இரண்டாவது முறையாக கொவிட்-19 பரிசோதனை நடத்தப்போவதாக தெரிவித்து உள்ளன.
அருகே இருக்கும் ஜெம், வெஸ்ட்கேட் கடைத்தொகுதிகளில் தொற்று காரணமாக அவற்றை இரண்டு வார காலம் மூடிவிடுவது என்று சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்து இருக்கிறது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த இரு மருத்துவ மனைகளும் மேலும் பரிசோதனைகளை நடத்துகின்றன.
இவை இந்த மாதத் தொடக்கத்தில் முதலாவது பரிசோதனையை நடத்தின.

