புதிதாக 26 பேருக்குத் தொற்று; 23 பேருக்குச் சமூகத்தொற்று
சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 26 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிப்படுத்தப் பட்டது. அவர்களில் 23 பேர் சமூகத்தொற்றுக்கு ஆளானவர்கள். வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியைச் சேர்ந்த ஒருவரும் அவர்களில் அடங்குவார். இருவர் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்தவர்கள்.
தொற்றுக்கு ஆளானவர்களில் 21 பேர் முந்தைய கொவிட்-19 தொற்று நோயாளிகளுடன் தொடர்புள்ளவர்கள். மற்ற மூவருக்கு தொடர்பில்லாத் தொற்று ஏற்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. 14 பேர் ஏற்கெனவே தடுத்து வைக்கப்பட்டவர்கள்.
வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்த இருவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து அவர்களுக்கு தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 61,916 ஆகி உள்ளது.
செவ்வாய்க்கிழமை புதிதாக தொற்றுக்கு ஆளானவர்களில் மூன்று மாணவர்களும் பாலர்பள்ளி சிறார் ஒருவரும் செங்காங் பொது மருத்துவமனையின் பணிமனை பராமரிப்பாளர் ஒருவரும் அடங்குவார்கள்.
ஹார்வெஸ்ட்@உட்லண்ட்ஸ் ஊழியர் தங்குவிடுதியில் ஏற்பட்ட தொற்று உட்பட மூன்று புதிய தொற்றுக் குழுமங்கள் பற்றி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
செவ்வாய் அன்று 13 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மருத்துவமனையில் 250 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தனர்.
இதர 279 பேர் சமூக நல்வாழ்வு நிலையங்களில் குணமடைந்து வருகிறார்கள். இவர்களுக்கு இலேசான அறிகுறிகள் தெரியவந்தன. இருந்தாலும் தொற்று இருப்பதாக பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.
கொவிட்-19 தொற்று காரணமாக 32 பேர் மரணமடைந்துவிட்டார்கள். கொவிட்-19 தொற்று இருந்தாலும் இதர காரணங்களுக்காக மாண்டவர்கள் 15 பேர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உடற்பிடிப்பு நிலையங்களுக்கு எதிராக போலிஸ் நடவடிக்கை
எப்போதுமே முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும் என்ற விதியைத் தன் ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் மீறவில்லை என்பதை உறுதிப்படுத்த தவறிவிட்டதற்காக 25 உடற்பிடிப்பு நிலையங்களுக்கு எதிராக போலிஸ் நடவடிக்கை எடுக்கும்.
உடற்பிடிப்பு சேவையின்போது விதியை மீறியதற்காக 23 தனிப்பட்டவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலிஸ் தெரிவித்தது.
கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் முற்றிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த இத்தகைய நிறுவனங்களுக்கு எதிரான சோதனைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளதாகவும் போலிஸ் தெரிவித்தது.
கடந்த இரண்டு வாரங்களில் இத்தகைய ஏறத்தாழ 850 நிறுவனங்களில் சோதனைகள் நடந்து உள்ளன. நிறுவனங்கள் எந்த அளவுக்கு விதிகளை மீறி இருக்கின்றன என்ற அடிப்படையில் அவற்றுக்கு எதிராக தண்டனை விதிக்கப்படும்.
அவற்றுக்கு $1,000 முதல் $2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். தனிப்பட்டவர்களுக்கு $1,000 அபராதம் விதிக்க முடியும்.
உடற்பிடிப்பு நிலையங்களை நடத்துவோருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு அதிக தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. பாதுகாப்பு இடைவெளியை மீறும் தனிப்பட்டவர்களுக்குச் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்க இடமுண்டு.
சுற்றுச்சூழல் தாக்கங்களை பற்றி அறிய உதவும் விளையாட்டு
இளையர்களைக் கொண்ட ஒரு குழு ஒரு விளையாட்டை உருவாக்கி வருகிறது. அதில் ஈடுபடுவோர் தாவரங்களை வளர்த்து அறுவடை செய்யலாம். கால்நடைகளை வளர்க்கலாம். உங்கள் உணவில் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அம்சங்களால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தாக்கம் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளலாம்.
அந்தப் புதிய விளையாட்டுக்கு 'ஃபுட்பிரிண்ட்' என்று பெயரிடப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் சேர்ந்த சமையல் விளக்கங்களையும் வளங்களையும் அது கொண்டிருக்கிறது.
சுற்றுச்சூழலில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றியும் தாங்கள் விரும்பி உண்ணுவதற்குத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உணவுப்பொருட்களால் ஏற்படக்கூடிய சுற்றுப்புற தாக்கங்கள் பற்றியும் மக்களுக்குப் போதிப்பது அந்த விளையாட்டின் நோக்கம்.
'இபி இம்பாக்ட்' என்ற லாபநோக்கற்ற ஒரு குழு கடந்த ஜனவரி மாதம் சுற்றுச்சூழல் பரிவர்த்தனைத் திட்டம் என்ற ஒரு செயல்திட்டத்தைத் தொடங்கியது.
அந்தச் செயல்திட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த இணைய ஆய்வரங்கு ஒன்றில் ஐந்து யோசனைகளைத் தாக்கல் செய்தார்கள். அவற்றில் இந்த விளையாட்டு யோசனையும் ஒன்று.
சுற்றுச்சூழல் பரிவர்த்தனைச் செயல்திட்டம் என்பது மதியுரைஞர்களையும் இளையர்களையும் இணைக்கின்ற ஒரு திட்டமாகும். இதன் மூலம் இளையர்கள் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றி சிறந்த முறையில் புரிந்துகொள்ளலாம். பிறகு அவற்றைத் தொழில்களிலும் கொள்கைகளிலும் அவர்கள் பயன்படுத்தலாம்.

