சிங்கப்பூரில் பதிவான கப்பலில் ஆறு நாட்களாக எரியும் தீ

சிங்கப்பூரில் பதிவான கப்பலில் ஆறு நாட்களாக எரியும் தீ

2 mins read
a3872659-f914-4a0c-9749-3ca215358245
கொழும்பு துறைமுகம் அருகே எக்ஸ்-பிரஸ் பெர்ல் கொள்கலன் கப்பலில் மே 25ஆம் தேதி தீ வேக மாகப் பரவியது. படம்: இந்திய கடலோர காவல் படை -

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட 'எக்ஸ்-பிரஸ் பெர்ல்' என்ற சரக்குக் கொள்கலன் கப்பல் இலங்கை அருகே தீப்பிடித்துக் கொண்டது.

அந்தக் கப்பலில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக காப்பற்றப்பட்டுவிட்டனர். 25 டன் நைட்ரிக் அமிலம், இதர பல வேதிப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றுடன் கூடிய 1,486 கொள்கலன்களை ஏற்றிக்கொண்டு அந்தக் கப்பல் இந்தியாவின் ஹசிரா என்ற துறைமுகத்தில் இருந்து மே 15ஆம் தேதி புறப்பட்டது.

கொழும்பு துறைமுகம் செல்வதற்காக அந்தத் துறைமுகத்தில் இருந்து ஏறத்தாழ 9.5 கடல் மைல் தொலைவில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது, அதில் இருந்த வேதிப்பொருட்கள் காரணமாக வெடி விபத்து நிகழ்ந்து தீ மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பருவநிலை மோசமாக இருந்ததால் தீ அதிவேகமாகப் பரவியது.

ஆறு நாட்களாக எரியும் தீயை அணைத்து கடலில் ரசாயனமும் எண்ணெய்ப் பொருட்களம் கலப்பதைத் தவிர்ப்பதற்காக இடைவிடாமல் இலங்கை அதிகாரிகள் போராடி வருகிறார்கள். ஐந்து இலங்கை கடற்படை கப்பல் உதவியுடன் ஐந்து இழுவைப் படகுகள் தீயை அணைத்து வருவதாக அசோசியட்டட் பிரஸ் தெரிவித்தது.

இதனிடையே, கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்ததால் கப்பல் ஒரு பக்கமாக சாயத் தொடங்கியதாகவும் அதனால் சில கொள்கலன்கள் கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை கடற்படை, விமானப் படையுடன் இந்திய கடலோர கடல்துறை தூய்மைக்கேடு தடுப்புக் கப்பலும் உதவிப் பணிகளில் ஈடுபடவிருந்தது.

இதனிடையே, ஐரோப்பாவில் இருந்து சிறப்பு தீயணைப்புச் சாதனம் வந்து சேர்ந்து இருப்பதாக எக்ஸ்-பிரஸ் பெர்ல் தெரிவித்தது.