ஃபைசர் தடுப்பூசி இந்தியாவில் உருமாறிய கிருமி தொற்றுவதையும் தடுத்து காக்கும்

ஃபைசர் தடுப்பூசி இந்தியாவில் உருமாறிய கிருமி தொற்றுவதையும் தடுத்து காக்கும்

2 mins read
7cf3b3fb-f653-46a6-ae69-789dfb1301dd
சிங்கப்பூரில் ஃபைசர் பயோ என்டெக் தடுப்பூசி பரவலாக போடப்படு கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் பரவலாக போடப்படும் ஃபைசர் பயோஎன்டெக் தடுப்பூசி இந்தியாவில் முதல் முதலாக காணப்பட்ட பி.16172 என்ற புதிய உருமாறிய கொவிட்-19 கிருமி தொற்றுவதையும் தடுத்துவிடும்.

அந்த ஊசியை இரு முறை போட்டுக் கொண்டவர்களுக்கே இந்த ஆற்றல் ஏற்படும்.

ஒரு முறை போட்டுக்கொண்டவர்களுக்கு பாதுகாப்பு அவ்வளவாக இருக்காது.

சிங்கப்பூரில் ஆகஸ்ட் தொடக்கத்திற்குள் ஏறக்குறைய ஒவ்வொருவரும் அதாவது 4.7 மில்லியன் மக்களும் குறைந்தபட்சம் ஒரு முறை ஊசியை போட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்பதால் ஓர் ஊசிக்கும் அடுத்த ஊசிக்கும் இடைப்பட்ட கால இடைவெளியை ஆறு முதல் எட்டு வார காலமாக அதிகரிக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், ஃபைசர் பயோஎன்டெக் எந்த அளவுக்கு உருமாறிய கிருமித்தொற்றைத் தடுக்கும் என்பதற்கான ஆதாரங்கள் தெரியவந்து இருக்கின்றன.

உருமாறிய கொரோனா பி.16172 கிருமி மே 25 நிலவரப்படி 54 நாடுகளில் பரவிவிட்டது. சிங்கப்பூரில் பெரிய அளவில் இரண்டு தொற்றுக் குழுமங்கள் ஏற்பட்டதற்கு அதுவே காரணம் என்று தெரியவந்துள்ளது.

ஃபைசர் பயோஎன்டெக் தடுப்பூசியை ஒரு முறை போட்டுக் கொண்டவர்களின் உடலில், பி.16172 கிருமியைத் தடுக்கும் ஆற்றல் 33 விழுக்காடு அளவுக்கு மட்டுமே ஏற்படுகிறது என்று பிரிட்டனில் நடத்தப்பட்ட தனிப்பட்ட ஓர் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

இது பற்றி கருத்து தெரிவித்த சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹோக் பொதுச் சுகாதாரப் பள்ளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் சூ லி யாங், ஒன்றுமே இல்லாததற்கு இது எவ்வளவோ மேல் என்று தெரிவித்தார்.

அந்தத் தடுப்பூசியை இரண்டு முறை போட்டுக்கொண்டால் உடலில் பாதுகாப்பு ஆற்றல் 88 விழுக்காடு அளவுக்கு உயருகிறது என்று அதே ஆய்வு இந்த வார தொடக்கத்தில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரை பொறுத்தவரை, மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவர்கள் குறைந்தபட்சம் ஒரு முறை கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். கால்வாசிப் பேருக்கு இரண்டு முறை ஊசி போடப்பட்டுள்ளது.

இருந்தாலும் அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் நாடுகளில் ஊசி போடப்பட்ட மக்களின் அளவு 50 விழுக்காட்டுக்கும் அதிகம். இதன் காரணமாக அந்த நாடுகள் படிப்படியாக கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகின்றன.

அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் போதிய அளவுக்குக் கிடைக்கும்போது இங்கு தடுப்பூசி போடும் இயக்கம் இன்னும் வேகமடைய வேண்டும் என்று பேராசிரியர் சூ கூறுகிறார்.