வெஸ்ட்கேட், ஜெம் கடைத்தொகுதிகளில் கொரோனா பரவிய முறை பற்றி வல்லுநர்கள் கருத்து

வெஸ்ட்கேட், ஜெம் கடைத்தொகுதிகளில் கொரோனா பரவிய முறை பற்றி வல்லுநர்கள் கருத்து

2 mins read
09000c66-76e1-41b4-b859-698b6ab26ef3
-
Google News Preferred Icon

ஜூரோங் ஈஸ்ட்டில் இருக்கும் வெஸ்ட்கேட், ஜெம் ஆகிய கடைத்தொகுதிகளிலும் சாங்கி விமான நிலையத்திலும் கொரோனா கிருமி பரவி பலரும் பாதிக்கப்பட்டது எப்படி என்பது பற்றிய புலன்விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது.

தனிமை உத்தரவை நிறைவேற்றுவதற்கான ஓர் இடத்தில் தனித்து இருந்த ஒரு துப்புரவு பெண் ஊழியரே அதற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த 53 வயது ஊழியருக்கு அவர் வேலை பார்த்த இடத்தில் கிருமி தொற்றி இருக்கும் பட்சத்தில், அவருக்கும் தனிமையில் அவர் தங்கி இருந்த இடத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று தொற்றுநோய் வல்லுநர் பேராசிரியர் பால் தம்பையா கூறினார்.

ஆகையால், கிருமி காற்று மூலம் அல்லது கிருமி இருந்துள்ள ஓர் இடத்தை அவர் தொட்டதன் மூலம் அவரைத் தொற்றி இருக்கலாம் என்று அவர் கூறினார்.

கிருமி முக்கியமாக மூன்று வழிகளில் தொற்றும். ஒருவரிடம் இருந்து வெளியாகி காற்று மூலம் வருகின்ற சுவாசத் துளிகள் மூலம் கிருமி பரவும். தும்மல் திரவத் துளிகள் மூலம் பரவும். கிருமி உயிரோடு இருக்கின்ற இடங்களைத் தொடுவதால் பரவும்.

கொரோனா கிருமி ஒருவர் தும்மும்போது வெளியாகக்கூடிய திரவத் துளிகள் மூலம் அருகே இருப்போருக்குப் பரவும் என பெரும்பாலான அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் காற்று மூலம் அல்லது கிருமி தொற்றிய இடங்களைத் தொடுவதன் மூலம் கிருமி பரவுகிறதா என்பது பற்றி ஏராளமான விவாதங்கள் நடந்து வருகின்றன.

இருந்தாலும் கிருமி காற்று மூலம் பரவு வதற்கு அவ்வளவாக வாய்ப்பு இல்லை என்று சில வல்லுநர்கள் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

வெஸ்ட்கேட், ஜெம், சாங்கி விமான நிலையம் ஆகியவற்றில் பலருக்கும் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது பற்றி தொடர்ந்து புலன்விசாரணை நடந்துவருகிறது.

பல வழிகளில் கிருமிப் பரவல் இடம்பெற்று இருப்பதற்கு வாய்ப்பு இருக்கக்கூடும் என்றும் தனிப்பட்டவர்களின் துப்புரவிலும் குறைகள் இருக்கக்கூடும் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

அந்தத் துப்பரவு ஊழியரான மாதுக்குத் தொற்று ஏற்பட்டதற்கு இரு வழிகளில் ஏதாவது ஒரு வழி காரணமாக இருக்கலாம் என்று ஆசிய பசிபிக் மருந்தக நுண்ணுயிரியல் சங்கத்தின் தலைவரான பேராசிரியர் தம்பையா கூறுகிறார். ஒன்று காற்று மூலம் அவருக்குப் பரவி இருக்கலாம்.

அல்லது கிருமி இருந்துள்ள இடத்தை தொட்டதன் மூலம் அவருக்குத் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று அவர் கருதுகிறார்.

கிருமி தொற்றிய ஒருவர் வெளியிட்ட காற்றை அந்த மாது சுவாசித்து இருக்கலாம். அல்லது கிருமி படிந்து இருந்த இடத்தைத் தொட்டு அதன் மூலம் அவருக்குத் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறிய பேராசிரியர், இதில் இரண்டாவது வழியே காரணமாக இருக்கும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.