தரத்தை உயர்த்தும் வகையில் தங்களது பணி முறைப்படுத்தப்பட வேண்டும் என சிங்கப்பூரில் கால்நடை மருத்துவத் துறையில் பணிபுரியும் பெரும்பாலான தாதியரும் தொழில்நுட்பர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சிங்கப்பூரில் 1,000 முதல் 1,500 வரையிலான அத்தகைய தாதியரும் தொழில்நுட்பர்களும் உள்ளனர். வனவிலங்குத் துறை, ஆராய்ச்சிக் கூடங்கள், குதிரைப் பராமரிப்பிடங்கள் போன்றவற்றில் பணிபுரிவோரும் இந்த எண்ணிக்கையில் அடங்குவதாக சிங்கப்பூர் கால்நடை மருத்துவத் தாதியர் மற்றும் தொழில்நுட்பர்கள் சாசனம் என்னும் அமைப்பின் உறுப்பினர் இவோன் யோங் தெரிவித்தார். சிங்கப்பூர் கால்நடை மருத்துவச் சங்கத்தின் ஓர் அங்கமாக இந்த அமைப்பு கடந்த மாதம் தொடங்கப்பட்டது.
தங்களது நிபுணத்துவப் பணி இங்கு முறைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல என்று கூறும் இந்த 35 வயது தாதி, சன்செட் வேயில் உள்ள 'த அனிமல் கிளினிக்' கால்நடை மருந்தகத்தில் வேலை செய்கிறார். குறிப்பாக இந்த வேலைக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பது இவரது கருத்து.
மேலும், இத்துறை தாதியருக்கான சம்பளம் எதுவும் வரையறுக்கப்படுவதில்லை என்றும் பொதுவாக $1,800 முதல் $3,000ஐ தொடும் அளவிலேயே அது இருப்பதாகவும் இவர் கூறினார்.
எங்களது வேலையை அங்கீ
கரித்து மதிக்க வேண்டிய அவசியம் உள்ளது," என்கிறார் திருவாட்டி யோங்.
மருத்துவர்களின் நலனையும்
பரிசீலிக்க கோரிக்கை
இதற்கிடையே, தற்போது நடத்தப்பட்டு வரும் மறுஆய்வில் தங்களது நல்வாழ்வு தொடர்பான அம்சங்களும் பரிசீலிக்கப்பட வேண்டும் என கால்நடை மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கால்நடை மருத்துவத் துறையில் உள்ள விவகாரங்களைக் கவனித்து தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் விலங்கு மற்றும் கால்நடை மருத்துவச் சேவை (ஏவிஎஸ்) அமைப்பும் சிங்கப்பூர் கால்நடை மருத்துவச் சங்கமும் (எஸ்விஏ) அந்த மறுஆய்வில் ஈடுபட்டுள்ளன.
கால்நடை மருத்துவத் துறையினரின் சவால்களும் விருப்பங்களும் மறுஆய்வின்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று இவ்விரு அமைப்புகளும் இவ்வாண்டு தொடக்கத்தில் அறிக்கை வாயிலாகத் தெரிவித்து இருந்தன.
ஒருசில ஆண்டுகள் இடைவெளியில் நடத்தப்படும் மறுஆய்வு, செல்லப் பிராணிகள் வளர்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இவர்களின் எண்ணிக்கை வளர்வதற்கேற்ப பராமரிப்புக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.
சிங்கப்பூரில் தற்போது சுமார் 100 கால்நடை மருந்தகங்களும் 400க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்களும் உள்ளனர்.

