திபெத்திய பௌத்தத்தின் மூலம் நிம்மதி அடைந்தவர்

திபெத்திய பௌத்தத்தின் மூலம் நிம்மதி அடைந்தவர்

2 mins read
e42521b9-70c4-4514-a434-7b421c2d1301
குரு சிங்கா ரின்பொச்சேயுடன் எம் சத்யநாராயணன் (கடந்தாண்டு விசாக தினத்தில் எடுக்கப்பட்ட படம்) -
Google News Preferred Icon

நேரலையில் குருவுடனும் ஏனையோருடனும் இணைந்து பிரார்த்தனையுடன் நேற்று விசாக தினத்தைத் தொடங்கினார் எம் சத்யநாராயணன்.

"புத்த ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்வது, கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடுவது, தொண்டூழியங்களில் ஈடுபடு என்று விசாக தினம் வழக்கமாக கொண்டாட்ட நாளாக இருக்கும். ஆனால், கொவிட் சூழல் காரணமாக மிக அமைதியான முறையில் விசாக தினத்தைக் கொண்டாடினேன்," என்றார் அவர்.

புத்த மதத்தவரான சத்யநாராயணன், 2012ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வந்த பின்னர் திபெத்திய புத்த நம்பிக்கையைப் பின்பற்றத் தொடங்கினார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த தமக்கு திபெத்திய நம்பிக்கையின் போதனைகளும் தியானங்களும் அதிலிருந்து மீண்டு வர உதவியதாக கூறினார் 47 வயது திரு சத்யநாராயணன்.

நிதி, முதலீட்டு ஆலோசகராகப் பணிபுரியும் அவர், தமது குடும்பத்திருக்கும் தியானம் மன அமைதியையும் நிம்மதியையும் தருவதாகக் குறிப்பிட்டார். அத்துடன் சிங்கப்பூரில் எந்த உறவுகளும் இல்லாத தமக்கு சக சீடர்கள் குடும்பத்தினர் போல இருந்ததாகத் தெரிவித்தார்.

புத்தர் பிறந்தது, ஞானம் பெற்றது, நிர்வாணம் அடைந்தது ஆகியன எல்லாம் வைகாசி மாத விசாக நாளில் நிகழ்ந்தன. அதனால்தான் பௌத்தர்கள் வைகாசி விசாக நாளை புத்தபூர்ணிமாவாகக் கொண்டாடுகின்றனர். இது உலகம் முழுவதும் கொண்டாடப்படும் திருநாளாகும். சிங்கப்பூரிலும் பௌத்த மதத்தின் விசாக தினத்தை வெகு சிறப்பாகக் கொண்டாடுவர். கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக நேற்று புத்த ஆலயங்கள் பலவற்றிலும் மக்கள் கூடுவதற்கு அனுமதிக்கவில்லை.

வழக்கமாக விசாக தினத்தன்று ரேஸ் கோர்ஸ் சாலையிலிருக்கும் புத்த ஆலயத்துக்கு குடும்பத்துடன் சென்று வழிபாடு செய்யும் ராஜு குடும்பத்தினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிலேயே வழிபாடு செய்கின்றனர். "நாங்கள் வழக்கமாக விசாக தினத்தில் புத்த ஆலயத்துக்குச் செல்வோம். அக்கம்பக்கத்தாருக்கு உணவு வாங்கித் தருவோம். சைவ உணவு உண்போம். இந்த ஆண்டு வீட்டிலேயே வழிபாடு செய்தோம். இணையத்தில் உணவு வாங்கி அண்டை வீட்டாருக்கு வழங்கினோம்," என்றார் பானு ராஜு, 25.