கிட்டத்தட்ட 36 ஆண்டுகளாக பௌத்த சமயத்தைக் கடைபிடித்துவரும் காப்புறுதி நிபுணரும் உள்ளூர் தொலைக்காட்சி பாடகருமான மோகன் ராமகிருஷ்ணன், 53, இந்நாள் மனித குலத்திற்குப் பொன்னாளாகக் கருதுகிறார்.
எனினும், புத்த மதத்திலேயே 'சோக்கா' என பரவலாக அழைக்கப்படும் நிச்சிரன் பௌத்த பிரிவைச் சேர்ந்துள்ள இவர் இந்த நாளுக்கென்றே தனிப்பட்ட கொண்டாட்டங்களில் ஈடுபடுவதில்லை. கௌதம புத்தர் பெருமானை நினைவில் கொள்வதற்காக ஒரு நாள் மட்டும் கொண்டாடுவதோடு கற்பித்துள்ள விழுமியங்களை வாழ்க்கைமுறையுடன் இணைத்துக்கொள்ளுவதே சாலச் சிறந்தது என்று பதினைந்து வயது முதல் இச்சமயத்தைப் பின்பற்றிவரும் திரு மோகன் கூறுகிறார்.
12ஆம் நூற்றாண்டில் ஜப்பானிய துறவி நிச்சிரன் என்பவரால் நிறுவிக்கப்பட்ட நிச்சிரன் பௌத்தத்தைத் திரு மோகன் பின்பற்றுகிறார். 'டைமோக்கூ' (Daimoku) என்ற ஜபத்தை தமது தாயார் தொடங்கியது மூலம் பௌத்தத்திற்கு அறிமுகமான திரு மோகன், உலக அமைதி மீது இந்த நெறி கொடுத்த முக்கியத்துவம் தமக்கு பிடித்துபோனதாகக் கூறினார். நிச்சிரன் பௌத்த அமைப்பான சிங்கப்பூர் சோக்கா சங்கம் நடத்தும் சந்திப்புகளிலும் பங்கேற்பதுடன் அந்த அமைப்பின் சார்பாக தேசிய நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். 1972ஆம் ஆண்டில் சங்கப் பதிவகங்களில் இடம்பெற்ற சிங்கப்பூர் சோக்கா சங்கம் , சமூகப் பிணைப்பை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளுக்கு பங்களித்து வருகிறது.
திரு மோகன், தமது முப்பதாவது வயது முதல் சிறுநீரக செயலிழப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற உபாதைகளை உணர்ந்தபோதுதான் நிச்சிரன் பௌத்த வழிமுறைகளின் மூலம் தமது மனதை மேலும் ஒருமுகப்படுத்தி கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையை மேற்கொண்டார்.
இளம் வயதில் அடிக்கடி கோபப்படக்கூடியவர் என்று தன்னை கூறிக்கொள்ளும் திரு மோகன், இம்முறை தம்மை நெறிப்படுத்தியதாகக் கூறினார். மனிதர்கள் அனைவருமே மனதளவிலான உன்னத நிலை அடையும் ஆற்றலைப் பெற்றிருப்பதாகவும் இதற்காக ஒருவர் துறவியாக மாறவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நிச்சிரன் பௌத்தம் முன்வைக்கும் கருத்து நடைமுறைக்கு ஒத்துப்போவதாக 24 வயது மகளுக்குத் தந்தையாக உள்ள திரு மோகன் கூறினார். "இதனை நமக்குள்ளேயே நாம் நடத்தும் புரட்சி என்றே கருதுவேன்," என்று அவர் கூறினார்.

