சிங்கப்பூருக்குத் திரும்புமுன் அல்லது சிங்கப்பூர் வழியாகப் பயணம் செய்யுமுன் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் கொவிட்-19 பரிசோதனை செய்துகொண்டு, 'தொற்று இல்லை' என உறுதிசெய்ய வேண்டும்.
இந்த நடைமுறை நாளை இரவு 11.59 மணியிலிருந்து நடப்புக்கு வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்குள் பயணிகள் அனைவரும் 'பிசிஆர்' சோதனை செய்துகொண்டு, 'தொற்று இல்லை' எனச் சான்று பெற வேண்டும். சிங்கப்பூர் வந்து இறங்கியதும் அச்சான்றிதழை அவர்கள் காட்ட வேண்டும்.
அத்துடன், இங்கு வந்ததும் அவர்கள் 'பிசிஆர்' சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 21 நாள்கள் வீட்டில் தங்கும் உத்தரவு பிறப்பிக்கப்படும்.
கொரோனா அபாயம் குறைவாக உள்ள நாடுகளில் கடைசி 21 நாள்களைக் கழித்தவர்களுக்கு இது பொருந்தாது.
சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் பயணத்திற்குமுன் பரிசோதனை செய்துகொள்ளும்படி சுகாதார அமைச்சு உத்தரவிட்டிருப்பது இதுவே முதன்முறை.

