கொரோனா பரிசோதனை முடிவு தாமதமாகலாம்

கொரோனா பரிசோதனை முடிவு தாமதமாகலாம்

2 mins read
3e76fd1e-c8c2-4bed-b6f3-a3b76a823b24
படம்: PARKWAY LABORATORIES -

கொவிட்-19 தொற்று உள்ளதா என்பதை அறிவதற்காக எச்சில்/சளி மாதிரிகளைப் பரிசோதனை செய்துகொண்டோர், பரிசோதனை முடிவுகளைப் பெறுவது 24 மணி நேரத்திற்குமேல் தாமதமாகக்கூடும்.

ஆய்வகங்களுக்கு அன்றாடம் பரிசோதனைக்கு வரும் மாதிரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்குக் காரணம் என்று 'பார்க்வே ஆய்வகங்களின்' தலைமை நிர்வாகி டாக்டர் டேனியல் டான் தெரிவித்து இருக்கிறார்.

கடந்த இரு வாரங்களில் நாளொன்றுக்குச் சராசரியாக, சென்ற மாதத்தில் வந்ததைப் போல் இருமடங்கு மாதிரிகள் பரிசோதனைக்கு வருவதாக டாக்டர் டான் குறிப்பிட்டார்.

எச்சில்/சளி மாதிரிகளைப் பரிசோதிக்கும் இயந்திரங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் ஆய்வகத் தொழில்நுட்பர்கள் கடந்த இரு வாரங்களாக ஒவ்வொரு நாளும் 16 முதல் 18 மணி நேரம் வேலை செய்வதாகவும் அவர் கூறினார். ஒரு சிலர் தங்களது ஓய்வு நாள்களிலும் தாமாக முன்வந்து வேலை செய்வதாக அவர் சொன்னார்.

"2017இல் நான் இங்கு வேலைக்குச் சேர்ந்ததில் இருந்து, இதுவே பரபரப்பான காலகட்டமாக இருந்து வருகிறது," என்றார் டாக்டர் டான்.

பார்க்வே பன்டாய் குழுமத்தின்கீழ் இயங்கும் பார்க்வே ஆய்வகங்கள், இப்போதைக்கு 200 பொது மருந்தகங்கள், நான்கு 'ஐஎச்எச் ஹெல்த்கேர்' மருத்துவமனைகள், சில தாதிமை இல்லங்கள், சிறைச்சாலைகள், வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகள் ஆகியவற்றில் இருந்து எச்சில்/சளி மாதிரிகளைப் பரிசோதனை செய்கிறது.

சமூகப் பரவலைத் தடுக்கும் விதமாக, பல்வேறு இடங்களிலும் அதிகளவில் எச்சில்/சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

'இன்னோகுவெஸ் டயக்னாஸ்டிக்ஸ்' போன்ற தன்னிச்சையான ஆய்வகங்களிலும் பரிசோதனை மாதிரிகள் வந்து குவிகின்றன. மிக அவசரமான சம்பவங்களில்கூட பரிசோதனை முடிவுகள் தாமதமாகின்றன.

இம்மாதம் 17ஆம் தேதியில் இருந்து நாளொன்றுக்குச் சராசரியாக 15,000 முதல் 20,000 மாதிரிகள் அங்கு வருகின்றன. கடந்த ஏப்ரலில் இந்த எண்ணிக்கை 5,000 முதல் 7,000ஆக இருந்தது.

ஐந்நூற்றுக்கும் அதிகமான பொது மருந்தகங்கள், ஒரு சில தனியார், பொது மருந்தகங்கள் மற்றும் எச்சில்/சளி மாதிரி சேகரிப்புத் தளங்களில் இருந்து வரும் மாதிரிகளை அந்த ஆய்வகம் பரிசோதனை செய்கிறது.

அதிகரித்துள்ள பணிச்சுமையால், மருத்துவரீதியாக அவசரமான சம்பவங்களுக்கான பரிசோதனை முடிவுகள் ஆறு முதல் 12 மணி நேரம் வரை தாமதமடையலாம் என்று 'இன்னோகுவெஸ் டயக்னாஸ்டிக்ஸ்' தலைமை நிர்வாகி கினி ஃபூ கூறினார்.

பணிச்சுமை அதிகரிப்பைச் சமாளிக்கும் விதமாக அதிக இயந்திரங்களை வாங்குதல், கூடுதல் பணியாளர்களை நியமித்தல் என ஆய்வகங்கள் துரிதமாகச் செயல்பட்டு வருகின்றன.

கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்து வாரம் ஏழு நாள்களும் 24 மணி நேரமும் பார்க்வே ஆய்வகங்கள் செயல்பட்டு வருவதாகக் கூறிய டாக்டர் டான், எல்லா நேரங்களிலும் முழுக் கொள்ளளவு பணியாளர்களுடன் இயங்கும் வகையில் மனிதவளத்தை அதிகப்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

அதேபோல, 'இன்னோகுவெஸ் டயக்னாஸ்டிக்ஸ்' ஆய்வகத்திலும் ஊழியர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாகவும் கூடுதல் பகுப்பாய்வுக் கருவிகளை வாங்கப் பரிசீலித்து வருவதாகவும் திருவாட்டி ஃபூ சொன்னார்.