சிங்கப்பூரில் நேற்று புதிதாக 24 பேருக்கு கொவிட்-19 உறுதிசெய்யப்பட, மொத்த பாதிப்பு 61,940ஆக உயர்ந்துவிட்டது.
புதிதாகப் பாதிக்கப்பட்டோரில் 14 பேர் சமூகத்தில் இருப்போர்; ஒருவர் விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்.
எஞ்சிய ஒன்பது பேரும் வெளிநாட்டிலிருந்து வந்தோர். அவர்களில் எழுவர், நாடு திரும்பிய சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.
நேற்று முன்தினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் சுவா சூ காங்கிலுள்ள கன்கார்டு தொடக்கப் பள்ளி மாணவர்கள் இருவரும் 'கிரேஸ் அசெம்பிளி ஆஃப் காட்' தேவாலயப் பாதிரியார் ஒருவரும் அடங்குவர்.
வெஸ்ட்வுட் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 15 வயது மாணவர் ஒருவருக்கும் வேறு இரு பாதிப்புகளுக்கும் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டதை அடுத்து, புதிய கிருமித்தொற்றுக் குழுமம் உருவாகி இருக்கிறது. அம்மாணவருக்குக் கடந்த திங்கட்கிழமை கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும் 31 பேர் தொற்றில் இருந்து மீண்டதை அடுத்து, நேற்று முன்தினம் வரை மொத்தம் 61,345 பேர் அதிலிருந்து முழுமையாகத் தேறிவிட்டனர்.
தேவாலயத்தில் தூய்மைப் பணிகள்
இதனிடையே, 'கிரேஸ் அசெம்பிளி ஆஃப் காட்' தேவாலய வளாகத்தில் உள்ள இரு பாலர் பள்ளிகள் தொடர்ந்து திறந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவாலயப் பாதிரியார் ஒருவருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளபோதும் அவர் அப்பள்ளிகளுடன் தொடர்பில் இருக்கவில்லை எனக் கூறப்பட்டது.
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவாலய வளாகம் முழுவதையும் சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

