அன்புக்குரியவர்களைக் காண ஏங்கும் உறவுகளின் நீண்ட, வலிமிகுந்த காத்திருப்பு தொடர்கிறது

அன்புக்குரியவர்களைக் காண ஏங்கும் உறவுகளின் நீண்ட, வலிமிகுந்த காத்திருப்பு தொடர்கிறது

2 mins read
ec7e9a80-b3bb-42bb-9598-d804daf4d679
தம் 69 வயது தாயாருடன் திருவாட்டி ஈஸ் குகதாசன், 35. படம்: ஈஸ் குகதாசன் -

மலே­சி­யா­வில் வசிக்­கும் தங்­க­ளின் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளைக் காண முடி­யா­மல் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் இங்­குள்ள மலே­சி­யர்­க­ளுக்­கும் கடந்த ஆண்டு கடும் சிர­மத்­து­ட­னேயே கழிந்­தது.

அடிக்­கடி ஜோகூர் கடற்­பா­லத்­தைக் கடந்து சென்று, உற­வினர்­களைக் கண்டு வந்­தது வழக்­க­மாக இருந்த நிலை­யில், இப்­போ­தைய கடும் கட்­டுப்­பா­டு­கள் அவர்­க­ளுக்கு வேத­னை­ய­ளிப்­ப­தாக உள்­ளது. ஆயி­னும், கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்டு, அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளு­டன் மீண்­டும் ஒன்­றி­ணைந்து அள­வ­ளா­வும் நாள் விரை­வில் திரும்­பும் என அவர்­கள் நம்­பிக்­கை­யு­டன் காத்­து இ­ருக்­கின்­ற­னர்.

கடந்த ஆண்டு இரு நாடு­களை­யும் கொவிட்-19 தொற்று தாக்­கி­ய­தில் இருந்து, மலே­சி­யா­வில் மும்­முறை நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டு­விட்­டது. வேலை தொடர்­பான கார­ணங்­கள் தவிர்த்து அங்கு 13 மாநி­லங்­களுக்கு இடையே இப்­போ­தைக்­குப் பய­ணம் செய்ய முடி­யாது.

இத­னி­டையே, கடந்த ஆண்டு இரு மாத­கா­லம் நடப்­பில் இருந்த நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டத்­தால் கொரோனா பர­வ­லைப் பேர­ளவு கட்­டுப்­ப­டுத்­திய நிலை­யில், சிங்­கப்­பூ­ரில் இம்­மா­தம் சமூ­கப் பரவல் மீண்­டும் தலை­தூக்­கத் தொடங்­கி­யுள்­ளது.

அதி­கா­ர­பூர்வ கார­ணங்­க­ளுக்­கா­க­வும் அத்­தி­யா­வ­சிய தொழில்­சார் பய­ணங்­க­ளுக்­கா­க­வும் சிங்­கப்­பூர்-மலே­சியா இடையே அதி­க­மா­னோர் சென்று வர அனு­ம­திக்­கும் வகை­யில், இரு சிறப்­புப் பயண ஏற்­பாட்­டுத் திட்­டங்­கள் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் நடப்­புக்கு வந்­தன. இருப்­பி­னும், உல­கம் முழு­வ­தும் கொரோனா பர­வல் மீண்­டும் அதி­க­ரித்­த­தை அடுத்து, இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான இரு­தரப்­புப் பயண ஏற்­பாட்­டுத் திட்­டம் இவ்­வாண்டு பிப்­ர­வரி 1 முதல் ரத்து செய்­யப்­பட்­டது.

இந்­நி­லை­யில், இம்­மா­தம் 12ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி வரை மலே­சி­யா­வில் மூன்­றாம் முறை­யாக நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டு உள்­ளது.

இத­னால் எல்லை திறக்­கப்­ப­டு­வது மேலும் தாம­த­மா­க­லாம். இந்­தச் செய்தி, இங்­குள்ள ஒரு யோகா நிலை­யத்­தில் விற்­பனை ஆலோ­ச­க­ரா­கப் பணி­பு­ரி­யும் 35 வய­தான திரு­வாட்டி ஈஸ் குக­தா­ச­னுக்கு ஏமாற்­ற­ம­ளிப்­ப­தாக அமைந்­துள்­ளது.

இவ­ரைப் போலவே ஏரா­ள­மான மலே­சி­யர்­கள் கடந்த ஆண்டு நோய்ப் பர­வல் தொடங்­கி­ய­தில் இருந்து தங்­க­ளின் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளைக் காண ஊர் திரும்ப முடி­யா­மல் தவிக்­கின்­ற­னர்.

திரு­வாட்டி ஈஸின் 69 வயது பெண் உற­வி­னர் இந்­தி­யா­வில் கொரோனா தொற்று கார­ண­மாக இம்­மா­தம் இறந்­து­விட்­டார்.

இதையடுத்து, சிரம்­பா­னில் வசிக்­கும் தம் 69 வயது தாயா­ரின் பாது­காப்பு குறித்து மனக்­க­லக்­கத்­து­டன் இருக்­கி­றார் திரு­வாட்டி ஈஸ். இவ­ரின் தாயார் இன்­னும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வில்லை.

"மலே­சி­யா­வில் கொரோனா பர­வல் மோச­ம­டைந்து வரும் நிலை­யில், என் தாயா­ரின் நிலை குறித்து எனக்­குக் கவ­லை­யாக இருக்­கிறது," என்­றார் திரு­வாட்டி ஈஸ்.

அத­னால், வேலையை விட்­டு­விட்டு, ஊர் திரும்­பி­வி­ட­லாமா என்று சில நேரங்­களில் இவ­ருக்கு எண்­ணம் எழு­வ­துண்டு.

ஆயி­னும், குடும்­பத்­தில் தாம் ஒரு­வரே வரு­மா­னம் ஈட்­டுவதால் தாயா­ரைக் காண்­ப­தற்­காக ஊர் திரும்­பு­வது நிதி நிலை­மை­யைச் சிக்­க­லாக்­கி­வி­டும் என திரு­வாட்டி ஈஸ் கரு­து­கி­றார்.

அவ­சர கார­ணங்­க­ளுக்­கா­கத் தங்­க­ளின் குடும்ப உறுப்­பி­னர்­களைக் காணும் வித­மாக, இறப்பு, கடும் உடல்­ந­லக் குறை­பாடு அவ­ச­ர­கா­லப் பய­ணத் திட்­டத்­தின்­கீழ் சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லது மலே­சி­யர்­கள் இன்­னொரு நாட்­டிற்­குச் செல்ல கடந்த வாரம் திங்­கட்­கி­ழ­மை­யில் இருந்து அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­ற­னர்.