செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
aed006fa-aba4-4b2b-ad5d-b514f595eae7
-
Google News Preferred Icon

சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளுக்குப் பயணத்திற்கு முந்திய பரிசோதனை

சிங்கப்பூருக்குத் திரும்புமுன் அல்லது சிங்கப்பூர் வழியாகப் பயணம் செய்யுமுன் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் கொவிட்-19 பரிசோதனை செய்துகொண்டு, 'தொற்று இல்லை' என உறுதிசெய்ய வேண்டும். இந்த நடைமுறை நாளை இரவு 11.59 மணியிலிருந்து நடப்புக்கு வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கப்பூருக்குப் புறப்படுமுன் 72 மணி நேரத்திற்குள் பயணிகள் அனைவரும் 'பிசிஆர்' சோதனை செய்துகொண்டு, 'தொற்று இல்லை' எனச் சான்று பெற வேண்டும். சிங்கப்பூர் வந்து இறங்கியதும் அச்சான்றிதழை அவர்கள் காட்ட வேண்டும். அத்துடன், இங்கு வந்ததும் அவர்கள் 'பிசிஆர்' சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 21 நாள்கள் வீட்டில் தங்கும் உத்தரவு பிறப்பிக்கப்படும். கொரோனா அபாயம் குறைவாக உள்ள நாடுகளில் கடைசி 21 நாள்களைக் கழித்தவர்களுக்கு இது பொருந்தாது. சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் பயணத்திற்குமுன் பரிசோதனை செய்துகொள்ளும்படி சுகாதார அமைச்சு உத்தரவிட்டிருப்பது இதுவே முதன்முறை.

தடுப்பூசி: 25 இடங்களுக்குள் சிங்கப்பூர்

கொவிட்-19 தடுப்பூசி நடவடிக்கையைப் பொறுத்தமட்டில், உலகில் முதல் 25 நாடுகளுக்குள் ஒன்றாக சிங்கப்பூர் விளங்குகிறது என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சோ சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் அனைத்துலக சுகாதாரப் பிரிவு துணைத் தலைவர் சு லீ யாங் தெரிவித்து உள்ளார். சிங்கப்பூர் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் சற்று அதிகமானோர் குறைந்தது ஒருமுறையேனும் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர். நால்வரில் ஒருவர் இருமுறையும் தடுப்பூசி போட்டுவிட்டனர். அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் போதுமான அளவிற்குத் தொடர்ந்து கிடைக்கத் தொடங்கியதும் தடுப்பூசி நடவடிக்கையின் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று இணைப் பேராசிரியருமான திரு ஹாக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

உணவுக்கடை மீதான தடை நீக்கம்

கடந்த மாதம் இரைப்பைக் குடல் அழற்சி பரவிய சம்பவத்தை அடுத்து, 6, ஹாலந்து குளோஸ் எனும் முகவரியில் செயல்படும் பிரபல கடல் உணவுக்கடையும் அதன் பங்காளி நிறுவனமும் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், 'கின் ஹாய்' என்ற அந்த உணவுக்கடையும் அதன் பங்காளியான 'கெமோனோ'வும் உணவு வர்த்தக நடவடிக்கைகளை் மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதிவரை அவ்விரு உணவுக் கடைகளிலும் சமைக்கப்பட்ட உணவை உட்கொண்ட 55 பேர் இரைப்பைக் குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகளுக்குப் புகார்கள் வந்தன. அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். சம்பவத்திற்கான காரணம் குறித்து இன்னும் விசாரணை இடம்பெற்று வருகிறது.