செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
3f573f9a-99b4-473a-a269-99fff6d6a8a4
-

சிங்கப்பூர் யாத்திரிகர்களுக்கான ஹஜ்ஜுப் பயணம் ஒத்திவைப்பு

சிங்கப்பூர் யாத்திரிகர்களுக்கான ஹஜ்ஜுப் பயணம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) நேற்று தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட 900 யாத்திரிகர்கள் அடுத்த ஆண்டு மெக்காவுக்குச் செல்ல ஏற்பாடு செய்து தரப்படும் என்று முயிஸ் கூறியது.

ஆனால் சவூதி அரேபியா நடைமுறைப்படுத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டு அடுத்த ஆண்டுக்கான ஹஜ்ஜுப் பயணம் தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று முயிஸ் தெரிவித்தது.

அதுமட்டுமல்லாது, சிங்கப்பூரிலும் மற்ற நாடுகளிலும் நிலவும் கொவிட்-19 சூழலைப் பொறுத்து அடுத்த ஆண்டுக்கான பயணம் குறித்த விவரங்கள் உறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

விற்பனைக்கு விடப்படும்

அரசாங்க நிலப் பகுதிகள்

அரசாங்கத்துக்குச் சொந்தமான இரண்டு நிலப் பகுதிகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களுக்கான அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின்கீழ் ஜாலான் தெம்புசுவிலும் தெம்பனிஸ் ஸ்திரீட் 62லும் உள்ள நிலங்கள் நேற்று காலை விற்பனைக்கு விடப்பட்டது.

இதற்கு முன்பு இவ்வார தொடக்கத்தில் அரசாங்கத்துக்குச் சொந்தமான இரண்டு நிலப் பகுதிகள் விற்பனைக்கு விடப்பட்டன. அந்த நிலப் பகுதிகளுக்கான ஏலக்குத்தகைக்கு நல்ல வரவேற்பு கிடைத்து கடுமையான போட்டி நிலவியதால் தற்போது மேலும் இரண்டு நிலங்கள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.

விதிமீறிய பூச்சிக்கொல்லி நிறுவனங்களுக்கு அபராதம்

அனுமதி பெறாமல் வனவிலங்குகளைப் பிடித்ததற்காக மூன்று பூச்சிக்கொல்லி நிறுவனங்களுக்கு தேசிய பூங்காக் கழகம் அபராதம் விதித்துள்ளது.

அந்த நிறுவனங்களுக்கு $600 வரை அபராதம் விதிக்கப்பட்டதாக தேசிய பூங்காக் கழகத்தின் வனவிலங்கு நிர்வாகப் பிரிவின் இயக்குநரான திரு ஹாவ் சூன் பெங் கூறினார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட வனவிலங்கு சட்டத்தின்கீழ் தேசிய பூங்காக் கழகத்தின் வனவிலங்கு நிர்வாகப் பிரிவின் தலைமை இயக்குநரின் அனுமதியின்றி சிங்கப்பூரில் வனவிலங்குகளைப் பிடிக்கக்கூடாது. அதுமட்டுமல்லாது, பிடிபடும் அனைத்து வனவிலங்குகளையும் கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.