திருத்த உத்தரவை ரத்து செய்யக் கோரும் விண்ணப்பம் நிராகரிப்பு

திருத்த உத்தரவை ரத்து செய்யக் கோரும் விண்ணப்பம் நிராகரிப்பு

2 mins read
d7ee6b17-79a4-4bd0-865a-b58bb6fb9a3a
படங்கள்: டி லாங்/ஃபேஸ்புக். GOV.SG -

பொஃமா எனப்படும் இணையம்வழி பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித் திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், தி ஆன்லைன் சிட்டிசன் ஏஷியாவால் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட செய்திக்குத் திருத்தம் போட உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தி ஆன்லைன் சிட்டிசன் விண்ணப்பம் செய்திருந்தது.

இந்நிலையில், அந்த விண்ணப்பத்தை உள்துறை அமைச்சு நிராகரித்துள்ளது.

இம்மாதம் 18ஆம் தேதியன்று இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்தக் காணொளி பொய்ச் செய்தியைப் பரப்பியதாக அமைச்சு கூறியது.

ஈசூன் வட்டாரத்தில் முகக்கவசம் அணியாத மூதாட்டி ஒருவரிடம் போலிஸ் அதிகாரிகள் மிகக் கடுமையாக நடந்துகொண்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது உண்மையல்ல என்று அமைச்சு வலியுறுத்தியது.

பொய்ச்செய்தியுடன் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்தக் காணொளி குறித்து இம்மாதம் 19ஆம் தேதியன்று போலிசார் விளக்கம் கேட்டனர்.

தி ஆன்லைன் சிட்டிசன் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது போல நடக்கவில்லை என்றும் மாறாக, சம்பந்தப்பட்ட போலிஸ் அதிகாரி அருகில் இருந்த உணவுக்கடைக்குச் சென்று அந்த மூதாட்டிக்கு உணவுப் பொட்டலம் வாங்கி தந்ததைக் காட்டும் காணொளியை போலிசார் வெளியிட்டனர்.

போலிஸ் அதிகாரியின் சீருடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் அந்தக் காணொளி பதிவானது. அந்த மூதாட்டியை அந்த போலிஸ் அதிகாரி கண்டிக்கவில்லை என்பதை காணொளிப் பதிவு நிரூபிப்பதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

தி ஆன்லைன் சிட்டிசன் பதிவேற்றம் செய்த செய்திக்கு எதிராக திருத்த உத்தரவைப் பிறப்பிக்குமாறு இம்மாதம் 21ஆம் தேதியன்று பொஃமா அலுவலகத்துக்கு சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் உத்தரவிட்டார்.

தி ஆன்லைன் சிட்டிசன் பதிவேற்றம் செய்த அந்தச் செய்தி பொய்யானது என்பதில் சந்தேகம் இல்லை என்று குறிப்பிட்ட உள்துறை அமைச்சு, அதற்கு எதிராக திருத்த உத்தரவைப் பிறப்பிப்பது சரிதான் என்று தெரிவித்தது.

திருத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை மிகக் கவனமாக பரிசீலனை செய்த பிறகு அதை ரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாக உள்துறை அமைச்சு கூறியது. விண்ணப்பம் ரத்து செய்யப்பட்டிருப்பதை தி ஆன்லைன் சிட்டிசனுக்குத் தெரியப்படுத்தி இருப்பதாகவும் அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்