உடன் தங்கியவரை ஊன்றுகோலால் அடித்த 93 வயது முதியவருக்கு ஆறு மாதச் சிறை

உடன் தங்கியவரை ஊன்றுகோலால் அடித்த 93 வயது முதியவருக்கு ஆறு மாதச் சிறை

2 mins read
10e1b26d-5a80-49f6-b5d7-0c866c1d1a99
-

புக்கிட் மேராவில் உள்ள ஒரு காப்பகத்தில் தன்னுடன் ஒரே அறையில் தங்கியிருந்தவரை நடக்கும் ஊன்றுகோலைக் கொண்டு அடித்த 93 வயது முதியவருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தங்கள் அறையில் மின் விளக்கை அணைப்பது பற்றி 93 வயது சிம் ஹுவாவுக்கும் 85 வயது ஓ சாய் தியாம் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து சிம், திரு ஓவை ஊன்றுகோலால் அடித்தார்.

அதன் தொடர்பில் வேண்டும் என்றே காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டை சிம் ஒப்புக்கொண்டார்.

மின்விளக்கு பற்றிய தகராற்றால், தன்னுடன் தங்கியிருப்பவரை சிம் அடித்த இரண்டாவது சம்பவம் இது. சிம்முக்கு கல்லீரல் புற்றுநோய் உள்ளது. இருப்பினும், மருத்துவ அறிக்கைக்காக காத்திருக்க விரும்பாமல், உடனடியாக தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சிம் கேட்டுக்கொண்டதாக அரசாங்க வழக்குரைஞர் இன்று நீதிமன்றத்தில் கூறினார்.

கடந்த அக்டோபர் 17ஆம் தேதி நடந்த சம்பவத்தில் திரு ஓ அறையில் தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது, சிம் மின்விளக்குகளை போட்டார். தான் தூங்கவேண்டும் என்றுகூறி மின்விளக்கை அணைத்தார் ஓ.

ஆனால் சிம் மீண்டும் விளக்கை அழுத்தினார். தமது படுக்கையில் இருந்தவாறு அதற்கு ஆட்சேபித்த திரு ஓவை, சிம் பலமுறை ஊன்றுகோலால் அடித்தார். திரு ஓ தரையில் விழுந்தபோதும் சிம் அவரை அடிப்பதை நிறுத்தவில்லை.

திரு ஓவை சிம் குறைந்தது 10 முறை ஊன்றுகோலால் அடித்ததாக அரசாங்க வழக்கறிஞர் கூறினார். அத்தாக்குதலால் திரு ஓவின் இடது கையில் எலும்பு முறிந்ததோடு, இடது கணுக்காலில் வீக்கம் ஏற்பட்டது.

திரு ஓ மருத்துவமனையில் 27 நாட்கள் தங்கியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்