டாக்சி ஓட்டுநர்களும் பொருட்களை விநியோகம் செய்பவர்களும் சாப்பிடுவதற்கான பகுதியைக் காட்டும் படத்தில், பதாகை வாசகங்கள் மாற்றப்பட்டதை பண்பற்ற செயல் என்று தொடர்பு தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ கண்டித்திருக்கிறார்.
படத்தில் உள்ள 'உண்ணும் இடம்' எனும் வாசகம் 'உயிரை விடும் இடம்' என்று கணிணியில் மாற்றப்பட்டு, இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது.
புளோக் 48ஏ லோவர் டெல்டா சாலையில் உள்ள ஒரு கூடாரத்தில் அத்தியாவசிய ஊழியர்கள் சாப்பிடுவதற்காக இடம் ஒதுக்கப்பட்டது. ஜாலான் புசார் நகர மன்றமும் பியோ கிரெசண்ட் குடியிருப்பாளர் கட்டமைப்பும் சேர்ந்து அதனை அமைத்தன.
கிரேத்தா ஆயர் - கிம் செங் வட்டார நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி டியோ ஃபேஸ்புக்கில் சம்பவம் பற்றி பதிவிட்டார். அந்த வட்டாரத்தில்தான் அந்த உண்ணும் கூடாரம் உள்ளது.
படத்தின் வாசகங்கள் மாற்றப்பட்டதை, உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத செயல் என்று திருமதி டியோ வர்ணித்தார்.
தங்கள் நல்லெண்ணத்தைப் பொ ருட்படுத்தாமல் பொய்களைப் பரப்புவோர் இணையத்தில் இருப்பது தங்களுக்கு ஏமாற்றம் தருவதாக பியோ கிரெசண்ட் குடியிருப்பாளர் கட்டமைப்பு அதன் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது. மாற்றப்பட்ட படத்தைப் புறக்கணிக்கும்படி அது பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
உணவகங்களிலும் உணவங்காடிகளிலும் அமர்ந்து சாப்பிட முடியாது என்பது வரும் ஜூன் 13ஆம் தேதி வரையிலான கொவிட் கட்டுப்பாடுகளில் ஒன்று. டாக்சி ஓட்டுநர்களும் பொருள் விநியோகிக்கும் ஓட்டுநர்களும் அமர்ந்து சாப்பிடவும் ஓய்வு எடுக்கவும் தீவு முழுவதும் இதுபோன்ற இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

