சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மாதம் 2021 இயக்கம் நேற்று தொடங்கியது.
நிலப் போக்குவரத்து ஆணையம், கல்வி அமைச்சு, மக்கள் கழகம், சிங்கப்பூர் மோட்டார் வாகனச் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் சிங்கப்பூர் சாலை பாதுகாப்பு மன்றமும் போக்கு வரத்து போலிசும் 'அனைவருக்கும் சாலைப் பாதுகாப்பு' என்ற கருப்பொருளுடன் அந்த இயக்கத்தைத் தொடங்கி உள்ளன.
சாலைச் சந்திப்புகளில் செயல்படும் சிவப்பு விளக்குகள், அளவுக்கு அதிக வேகத்தில் செல்வது ஆகியவை தொடர்பான புரிந்துணர்வை மேம்படுத்ததுவதில் இந்த இயக்கம் ஒருமித்த கவனம் செலுத்தும்.
பொது போதனைத் திட்டத்தை ஒட்டி இரண்டு காணொளிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. அவை ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட தளங்களிலும் தேசிய தொலைக்காட்சிலும் இடம்பெறும்.
சாலையில் மோட்டார் வாகனங்கள் வருவதைப் பார்த்து பாதுகாப்பாக வாகனம் ஓட்டிச் செல்வது முக்கியமானது என்பதைப் புரியவைக்க 'பாதுகாப்பான மோட்டார் ஓட்டுநரை அடையாளம் காணுதல்' என்ற ஒரு மாத கால செயல்திட்டம் ஜூன் 27 வரை நடப்பில் இருக்கும். அதன்படி சாலைகளில் விதிகளை மீறாமல் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு வெகுமதிகள் கிடைக்கும்.
உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் இணைப் பேராசிரியர் டாக்டர் முகம்மது ஃபைசல் இப்ராஹிம், சாலை பாதுகாப்பு மாதம் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

