விக்டோரியா மாநிலத்தில் இருந்து வருவோருக்குக் கட்டுப்பாடு
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் இருந்து சிங்கப்பூருக்கு வருவோர் ஏழு நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
விக்டோரியாவில் தொற்று கூடுவதை அடுத்து சிங்கப்பூர் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தக் கட்டுப்பாடு இன்று இரவு 11.59 மணி முதல் நடப்புக்கு வருவதாக அமைச்சு குறிப்பிட்டு உள்ளது.
சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்னதாக 21 நாட் களுக்குள் விக்டோரியா சென்று இருக்கக்கூடிய சிங்கப்பூர் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் நீண்டகால அனுமதிதாரர்களும் இங்கு தரை இறங்கும்போது கொவிட்-19 பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
அவர்கள் தங்கள் வசிப்பிடத்தில் தங்களை ஏழு நாட்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ளவும் வேண்டும், அந்தத் தனிமைக் காலம் முடியும் முன்னதாகவே அவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
இங்கு வருவதற்கு முன்னதாக 21 நாட்களுக்குள் விக்டோரியா சென்று இருக்கக்கூடிய குறுகிய கால விசாதாரர்கள் இங்கு தரை இறங்க அனுமதி இராது.
முந்தைய 21 நாட்களில் விக்டோரியா மாநிலம் நீங்கலாக ஆஸ்திரேலியாவின் இதர பகுதிகளில் இருந்து இங்கு வருவோர் தனிமை நிபந்தனைக்குப் பதிலாக இங்கு தரையிறங்கியதும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
நிலவரங்களுக்கு ஏற்ப சிங்கப்பூர் தனது எல்லை நிபந்தனைகளைச் சரிசெய்து வரும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
80% க்கும் அதிக ஆற்றலுடன் இயங்கும் பரிசோதனைக்கூடங்கள்
சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று அதிகமாகி உள்ள சூழலில் பிசிஆர் பரிசோதனைக்கான தேவை அதிகமாகி இருக்கிறது. இந்நிலையில், இங்குள்ள பரிசோதனைக் கூடங்கள், தங்கள் ஆற்றலில் 80%க்கும் அதிக அளவுக்குச் செயல்பட்டு வருகின்றன.
சிங்கப்பூரில் மே 25ஆம் தேதி வாக்கில் 27 கொவிட்-19 பரிசோதனைக்கூடங்கள் செயல்பட்டு வந்தன. அவை அன்றாடம் 70,000 பரசோதனைகளை நடத்த முடியும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதனிடையே, இத்தகைய பரிசோதனைக்கூடங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் அளவு கணிசமாக அதிகரித்து உள்ளதாக அமைச்சு கூறியது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
அந்த அளவு, அண்மையில் தொற்றுக் குழுமங்கள் ஏற்பட்டதற்கு முன்னதாக இங்கு ஏறத்தாழ 30 முதல் 40% வரை இருந்தது. அது இந்த மாதத் தொடக்கத்தில் 80%க்கும் அதிகமாகக் கூடி இருக்கிறது.
கொவிட்- 19 பரிசோதனைகளை நடத்துவதற்கான தேசிய ஆற்றலை அரசாங்கம் தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது என்றும் அமைச்சு கூறி உள்ளது.
2020 ஏப்ரல் தொடக்கத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 2,900 பிசிஆர் பரிசோதனைகளை நடத்த முடிந்தது. 2021 ஜனவரி முதற்கொண்டு நாள் ஒன்றுக்கு 60,000 முதல் 70,000 பரிசோதனைகளை நடத்த முடியும். இந்த அளவுக்கு சோதனைக்கூடங்கள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இதனிடையே, இத்தகைய பரிசோதனைக்குத் தேவை அதிகரித்து இருப்பதால் பரிசோதனை முடிவுகள் தெரிவதற்கு ஆகும் காலம் கூடி இருப்பதாக தனியார் சோதனைக்கூடங்கள் குறிப்பிட்டுள்ளன. வழக்கமாக முடிவு தெரிய 24 மணி நேரம் ஆகும்.
இணையத் தள ஆய்வை அகற்ற அதிகாரிகள் கோரிக்கை
இஸ்லாமிய சமய ஆசிரியைகளுக்கு எதிராக பாலியல் வன்செயல்களை இடம்பெறச் செய்யும் கண்ணோட்டத்துடன், அவர்கள் எந்த அளவுக்குக் கவர்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை வரிசைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளும் ஓர் ஆய்வு, இங்குள்ள சமூக ஊடகத்தளங்களில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிங்கப்பூரின் இணைய நடத்தை விதிகளுக்கு முரணாக அந்த ஆய்வு இருப்பதாகவும் அதற்கு இங்கு இடமல்லை என்றும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
MeWe என்ற சமூக ஊடகத்தில் இடம்பெற்று இருந்த அந்த ஆய்வு பற்றி முதன் முதலாக புதன்கிழமை தெரியவந்தது. அது பற்றி இப்போது புலன்விசாரணை நடக்கிறது. அதை அகற்றும்படி ஆணையம் அந்தத் தளத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனிடையே, அந்த ஆய்வை கடுமையாகக் கண்டிப்பதாக தொடர்பு தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார். இது பற்றி வியாழக்கிழமை கருத்து தெரிவித்த முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம், இந்த விவகாரம் பற்றிய புலன்விசாரணையை வேகப்படுத்தும்படி கேட்டு போலிசிடம் புகார் செய்திருப்பதாகக் கூறியது.

