பொஃப்மா எனப்படும் இணையம்வழி பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித் திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், தி ஆன்லைன் சிட்டிசன் ஏஷியாவால் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட செய்திக்குத் திருத்தம் போட உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தி ஆன்லைன் சிட்டிசன் ஏஷியா விண்ணப்பம் செய்திருந்தது.
இந்நிலையில், அந்த விண்ணப்பத்தை உள்துறை அமைச்சர்
கா. சண்முகம் நிராகரித்துள்ளார்.
இம்மாதம் 18ஆம் தேதியன்று இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்தக் காணொளி பொய்ச் செய்தியைப் பரப்பியதாக அமைச்சு கூறியது.
ஈசூன் வட்டாரத்தில் முகக்
கவசம் அணியாத மூதாட்டியிடம் போலிஸ் அதிகாரிகள் மிகக்
கடுமையாக நடந்துகொண்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது உண்மையல்ல என்று அமைச்சு வலியுறுத்தியது.
பொய்ச்செய்தியுடன் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்தக் காணொளி குறித்து இம்மாதம் 19ஆம் தேதியன்று போலிசார் விளக்கம் கேட்டனர். தி ஆன்லைன் சிட்டிசன் ஏஷியாவின் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது போல நடக்கவில்லை என்றும் சம்பந்தப்பட்ட போலிஸ் அதிகாரி அருகில் இருந்த உணவுக்
கடைக்குச் சென்று அந்த மூதாட்டிக்கு உணவு வாங்கி தந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைக் காட்டும் காணொளியை போலிசார் வெளியிட்டனர்.
போலிஸ் அதிகாரியின் சீருடையில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் அந்தக் காணொளி பதிவானது. மூதாட்டியை போலிஸ் அதிகாரி கண்டிக்கவில்லை என்பதை காணொளிப் பதிவு நிரூபிப்பதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
தி ஆன்லைன் சிட்டிசன் ஏஷியா பதிவேற்றம் செய்த செய்திக்கு எதிராக திருத்த உத்தரவைப் பிறப்பிக்குமாறு இம்மாதம் 21ஆம் தேதியன்று பொஃப்மா அலுவலகத்துக்கு சட்ட, உள்தறை அமைச்சர்
கா. சண்முகம் உத்தரவிட்டார்.
தி ஆன்லைன் சிட்டிசன் ஏஷியா பதிவேற்றம் செய்த அந்தச் செய்தி பொய்யானது என்பதில் சந்தேகம் இல்லை என்று குறிப்பிட்ட உள்தறை அமைச்சு, அதற்கு எதிராக திருத்த உத்தரவைப் பிறப்பிப்பது சரிதான் என்று தெரிவித்தது.
திருத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை மிகக் கவனமாகப்
பரிசீலனை செய்த பிறகு அதை நிராகரிக்க முடிவெடுத்திருப்பதாக உள்தறை அமைச்சு கூறியது.
விண்ணப்பம் நிராகரிக்கப்
பட்டிருப்பதை தி ஆன்லைன் சிட்டிசன் ஏஷியாவுக்குத் தெரியப்படுத்திருப்பதாகவும் அமைச்சு கூறியது.
உண்மை வெளியானதில் மகிழ்ச்சி
இதற்கிடையே, உண்மை வெளிச்சத்துக்கு வந்தது மகிழ்ச்சியைத் தருவதாக இந்த விவராகத்தில் சம்பந்தப்பட்ட 45 வயது போலிஸ் ஆய்வாளர் ஜெஃப் லிம் கொக் ஹுவீ தெரிவித்தார்.
இவர் ஈசூன் சவுத் அக்கம்பக்க போலிஸ் நிலையத்தின் துணைக் குழுத் தலைவராவார்.
மூதாட்டி ஒருவர் பொது இடத்தில் முகக்கவசம் அணியவில்லை என்றும் அவர் வழி தெரியாமல் குழப்பத்தில் இருந்ததாகவும் இம்மாதம் 17ஆம் தேதியன்று போலிசுக்குத் தகவல் கிடைத்ததாக
ஆய்வாளர் லிம் தேரிவித்தார்.
அதையடுத்து சக அதிகாரிகள் மூவருடன் மூதாட்டி இருந்த இடத்துக்குச் சென்றதாக அவர் கூறினார்.
மூதாட்டி பதற்றம் அடையாமல் இருக்க அவருடன் அமர்ந்து பேச முயன்றதாக திரு லிம் தெரிவித்தார்.
"மூதாட்டியிடம் பேசியதில் அவர் தமது நண்பர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தார் என்பது தெரியவந்தது. அவர் பசியுடன் இருப்பார் எனக் கருதி, சாப்பிட ஏதாவது வேண்டுமா எனக் கேட்டேன். அதற்கு அந்த மூதாட்டி, இரண்டு கோழித் துண்டுகள் வேண்டும் என என்னிடம் கூறினார். இரண்டு கோழித் துண்டுகளை வாங்கி அவரிடம் கொடுத்தேன்," என்றார் அவர்.
சொந்த செலவில் அந்த மூதாட்டிக்கு உணவு வாங்கிக் கொடுத்ததாகக் ஆய்வாளர் லிம் கூறினார். அதுமட்டுமல்லாது, அந்த மூதாட்டியை வீட்டுக்கு அனுப்ப முன்வந்ததாகவும் ஆனால் மூதாட்டி
மறுத்துவிட்டதாகவும் திரு லிம் தெரிவித்தார்.
அவருடன் பேசியதில் அந்த மூதாட்டி ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தமக்குத் தோன்றியதாக ஆய்வாளர் லிம் கூறினார். அந்த மூதாட்டிக்கு அவரது பெயர், வீட்டு முகவரி ஞாபகம் இல்லை என்றார் அவர்.
அருகில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புக் கட்டடம் ஒன்றில் அந்த மூதாட்டி வசிப்
பதாக வழிப்போக்கர் ஒருவர் கூறியதாக திரு லிம் கூறினார்.
மூதாட்டியின் வீட்டைக் கண்டு பிடிக்க ஆய்வாளர் லிம்முடன் இருந்த இரண்டு போலிஸ் அதிகாரிகள் அந்தக் கட்டடத்தில் வீடு வீடாக ஏறி, இறங்கினர். சக அதிகாரி ஒருவருடன் திரு லிம்
மூதாட்டியுடன் இருந்தார்.
வீட்டைக் கண்டுபிடித்ததும் கீழே இறங்கி மூதாட்டியை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு மூதாட்டியின் பணிப்பெண்ணிடம் அதிகாரிகள் கூறினர்.
மூதாட்டியை அழைத்துச் செல்ல பணிப்பெண் வந்ததும் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று மூதாட்டிக்கு நினைவூட்டியதாக ஆய்வாளர் லிம் கூறினார்.
"நான் குரலை உயர்த்திப் பேசவில்லை," என்று தி ஆன்லைன் சிட்டிசன் ஏஷியா முன்வைத்த
குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.
நடந்தது திரித்துக் கூறப்பட்டு நானும் எனது சக அதிகாரிகளும் எதிர்மறையான கோணத்தில்
காட்டப்படுவோம் என சிறிதுகூட எதிர்பார்க்கவில்லை.
"எனக்கு அநியாயம் இழைக்கப்பட்டதாக நான் உணர்ந்தேன். ஆனால் பொதுமக்களுக்கு உதவவும் எங்களது கடமையைச் செய்யவும் இந்தச் சம்பவம் தடையாக இருக்கக்கூடாது," என்றார் அவர்.

