பிரெஞ்சு கடற்படைக்குச் சொந்தமான LHD Tonnerre ஹெலிகாப்டர் நேற்று சாங்கி கடற்படை முகாமில் தரையிறங்கியது. அறிமுகமில்லாத வட்டாரங்களில் இயங்க அந்த ஹெலிகாப்டர் அதிகாரிகளுக்குக் கடந்த ஐந்து மாதங்களாகப் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஜப்பான், அமெரிக்க, ஆஸ்திரேலிய கடற்படைகளுடன் இந்த ஹெலிகாப்டர் பெருமளவிலான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
அண்மைய காலமாக ஆசிய பசிபிக் வட்டாரத்தில் ஐரோப்பிய கடற்படைகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன.
இவ்வாண்டின் பிற்பகுதியில் ஆசிய பசிபிக் கடற்பகுதியில் ஜெர்மனிக் கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல் முதல்முறையாக நங்கூரமிட இருக்கிறது.
இதற்கிடையே, சிங்கப்பூர் கடற்படை, ஆகாயப் படை ஆகியவற்றுடன் பிரான்சின் LHD Tonnerre ஹெலிகாப்டர் நேற்று ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டது. பயிற்சியின்போது LHD Tonnerr ஹெலிகாப்டரில் 150 வீரர்கள் ஈடுபட்டனர். அவர்களில் 15 பேர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் இந்தோனீசியா, மலேசியா, வியட்னாம் போன்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்களாவர்.
குறிப்பிட்ட எந்த ஒரு நாட்டையும் குறிவைத்து பிரான்சுக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் இந்த வட்டாரத்துக்கு வரவில்லை என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சிங்கப்பூருக்கான பிரெஞ்சுத் தூதர் மார்க் அபென்சோர் வலியுறுத்தினார்.
"கடல்வழிப் பயணம், வான்
வழிப் பயணச் சுதந்திரத்தில் பிரான்ஸ் கொண்டிருக்கும் கடப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த வட்டாரத்துக்கு வந்துள்ளோம். இதற்குச் தென் சீனக் கடலும் உட்படும். இந்த முக்கிய கொள்கைகள் தொடர்பாக எங்களுடைய கடப்பாட்டை வெளிப்படுத்தினால் தென் சீனக் கடலை மேலும் பாதுகாப்பானதாக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம். அதே சமயத்தில் தென் சீனக் கடல் தொடர்பாக நிலவும் சர்ச்சையில் நாங்கள் தலையிடவில்லை.
"அனைத்துத் தரப்பினரும் விதிமுறைகளுக்கு ஏற்ப நடந்துகொண்டு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்," என்றார் அவர். தென் சீனக் கடலில் உள்ள சில தீவுகளை சீனா, தைவான், புருணை, இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், வியட்னாம் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.