மசராத்தி கார் ஓட்டுநரின் மேல்முறையீடு தள்ளுபடி
அபாயகரமான முறையில் கார் ஓட்டிய மசராத்தி ஓட்டுநரின் மேல்முறையீட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 37 வயது லீ செங் யானுக்குக் கடந்த ஆண்டு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை, $3,700 அபராதம், வாகனம் ஓட்ட வாழ்நாள் தடை ஆகியவை விதிக்கப்பட்டன.
தெரிந்தே போக்குவரத்து போலிஸ் அதிகாரிக்குப் படுகாயம் விளைவித்த குற்றத்துக்காக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது. வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்பட்டிருந்தும் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதியன்று பிடோக் ரெசர்வோர் சாலையில் மசராத்தி கார் ஒன்றை லீ ஓட்டினார். பாதுகாப்பு இடைவார் அணியாததால் போக்குவரத்து போலிசார் அவரது காரைத் தடுத்து நிறுத்தினர். ஆனால் அங்கிருந்து தப்பிச் செல்ல லீ முயன்றபோது போக்குவரத்து அதிகாரி ஒருவரின் சீருடை காரில் சிக்கிக்கொண்டது. கிட்டத்தட்ட 124 மீட்டர் தூரத்துக்கு அந்த அதிகாரி இழுத்துச் செல்லப்பட்டார். லீயின் செயல் மிகவும் கொடூரமானது என்றும் ஆபத்தானது என்றும் நீதிபதி சாடினார்.
பதவி நீக்கத்துக்கு எதிராக வழக்கு
ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் உள்ள நரிட்டா அனைத்துலக விமான நிலையத்தில் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானச் சிப்பந்திகளாகப் பணியாற்றிய எட்டு சிங்கப்பூரர்கள், தாங்கள் நியாயமற்ற முறையில் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறி வழக்கு தொடுத்துள்ளனர்.
அந்த அமெரிக்க நிறுவனத்துக்கு எதிராக மொத்தம் 83 விமானச் சிப்பந்திகள் வழக்கு தொடுத்துள்ளனர். விமான நிறுவனம் தங்களை மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் முறையற்ற வகையில் தங்களைப் பதவி நீக்கம் செய்த நாளிலிருந்து தங்களுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தைத் தர வேண்டும் என்றும் இவர்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர்.
கவிமாலை மாதாந்திரச் சந்திப்பு
கவிமாலையின் மாதாந்திரச் சந்திப்பு நாளை மாலை 6:00 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
'கவிதையும் நானும்' எனும் தலைப்பில் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவும், 'என் பார்வையில் கவிதை' எனும் தலைப்பில் கவிஞர் க.து.மு. இக்பாலும் உரையாற்றுகின்றனர். பிடித்த, படித்த கவிதை வாசித்தல், 'வியர்வை வெளி' எனும் தலைப்பிலான இம்மாதக் கவிதைப் போட்டி, பரிசளிப்பு, கவிதை விமர்சனம் போன்ற அங்கங்களும் உண்டு. இணையம் வழி நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஸூம் எண்: 238 635 9660.
எம்ஏஎஸ் இயக்குநர் சபை துணைத் தலைவராக லாரன்ஸ் வோங் நியமனம்
சிங்கப்பூர் நாணய ஆணைய இயக்குநர் சபையின் துணைத் தலைவராக நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் நியமிக்கப்பட்டுள்ளார். இயக்குநர் சபை உறுப்பினராக ஜூன் 1லிருந்து 2024ஆம் ஆண்டு மே 31 வரை இயக்குநர் சபை உறுப்பினராக திரு வோங் இருப்பார். இதற்கு முன்பு அவர் 2011ஆம் ஆண்டு ஜுன் மாதத்திலிருந்து 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் இயக்குநர் சபையில் இடம்பெற்றிருந்தார். சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தற்போதைய துணைத் தலைவரான திரு லிம் ஹெங் கியாங் வரும் திங்கட்கிழமையன்று பதவி விலகுகிறார்.

