போலி சட்ட நிறுவனங்களை அமைத்து, வழக்கறிஞர்கள் போல ஆள்மாறாட்டம் செய்வது, சட்ட நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகளைப் போல் உள்ள போலி முகவரிகளிலிருந்து மின்னஞ்சல் அனுப்புவது போன்றவற்றில் ஈடுபட்டு பொதுமக்களிடம் இருந்து பணத்தை ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்துள்ளன. சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கம் அவ்வாறு எச்சரித்திருக்கிறது.
அதிகமான சிங்கப்பூரர்கள் இணைய பரிவர்த்தனைக்கு மாறியுள்ள நிலையில், மோசடிகள் அதிக சாதூர்யத்துடன் நடைபெறுவதாக சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரு கிரெகரி விஜயேந்திரன் தெரிவித்தார்.
இணையம் வழியாக நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அதுபற்றி அவர் விவரித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் வழக்கறிஞர்கள் அல்லது சட்ட நிறுவனங்கள் தொடர்பான ஏழு மோசடிச் சம்பவங்கள் நடந்துள்ளதாக திரு கிரெகரி சொன்னார்.
அத்தகைய ஒரு சம்பவத்தில் மோசடிக்காரர்கள் 'கோ கெங்' சட்ட நிறுவனத்தை அமைத்து, அதன் இணையப்பக்கத்தில் போலி வழக்கறிஞர்களின் விவரக் குறிப்புகளைப் பதிவேற்றினர். அவற்றுக்கு உண்மையான வழக்கறிஞர்களின் புகைப் படங்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும், உண்மையான சட்ட நிறு வனங்களின் இணையத்தளங்களில் இடம்பெற்ற வாடிக்கையாளர் விமர்சனங்கள் அதில் பயன்படுத்தப்பட்டன.
சட்ட நிறுவனம் வழக்கை எடுக்கும் முன்னதாக, கட்டணத்தைச் செலுத்துமாறு வாடிக்கைகயாளர் களிடம் கூறப்பட்டது. இணையத் தளத்தை முடக்கும்படி அதற்கான இணையக் கட்டமைப்பை வழங்கும் நிறுவனத்துக்கு வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் அறிக்கை அனுப்பப் பட்டிருக்கிறது. இணையக் கட்டமைப்பை வழங்கும் நிறுவனம் அமெரிக்காவில் செயல்பட்டு வருகிறது. அறிக்கை கிடைத்தது என்று அந்நிறுவனம் கூறியுள்ளபோதும், போலி இணையத்தளம் இன்னும் செயல்பட்டு வருகிறது.
மற்றொரு மோசடியில், சிங்கப்பூர் சட்ட நிறுவனத்தின் வெளிநாட்டுக் கிளை போன்ற தோற்றத்தில் இணையத்தளத்தைத் தொடங்கி மோடி செய்யப்பட்டது.
இன்னொரு சம்பவத்தில், சட்ட நிறுவனத்துக்கு, அதன் வாடிக்கையாளர் நிறுவனத்தின் முகவரி போன்ற போலி முகவரியிலிருந்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. தனக்குரிய அடகுக் கடன் கட்டணத்தை உள்ளூர் வங்கிக்கு பதில் வெளிநாட்டு வங்கியில் செலுத்தும்படி அதில் கூறப்பட்டது.
2019இல் நடந்த ஒரு மோசடியில் மட்டும் பண இழப்பு ஏற்பட்டதாக திரு கிரெகரி கூறினார்.
சட்ட சேவைகள் கட்டுப்பாட்டு ஆணையத்தின் இணையத்தளத்தில் வழக்கறிஞர்கள், சட்ட நிறுவனங்களின் அதிகாரபூர்வ பொது விவரப்பட்டியல் உள்ளது. மின்னஞ்சல் விவரங்களை அதில் சரிபார்க்கும்படி திரு கிரெகரி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
கட்டணம் கேட்டு மின்னஞ்சல் பெற்றால், வழக்கறிஞர்களிடம் முதலில் கேட்டுவிட்டு கட்டணம் செலுத்தும்படியும் அவர் கூறினார்.

