சிங்கப்பூரின் எட்டாவது எம்ஆர்டி வழித்தடமாக குறுக்குத் தீவு வழித்தடம் (சிஆர்எல்) அமைகிறது.
அந்த வழித்தடத்தில் சாங்கி ஈஸ்ட் பணிமனை அமைக்கப்படும்.
அந்தப் பணிமனையை வடி வமைத்துக் கட்டுவதற்காக $1.05 பில்லியன் மதிப்புள்ள உடன்பாட்டை நிலப் போக்குவரத்து ஆணையம் கொடுத்துள்ளது.
'சைனா ஜிங்யே இன்ஜினியரிங்' என்ற நிறுவனத்தின் சீனக் கிளை நிறுவனத்திற்கு அந்த ஒப்பந்தம் கிடைத்துள்ளது.
இந்த நிறுவனம், சிங்கப்பூரில் உள் கட்டமைப்பு வசதிகள், குடியிருப்புத் திட்டங்களில் அனுபவம் வாய்ந்தது. இந்த நிறுவனம், இப்போது தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் வழித்தடத்தில் சுரங்க வழிகள் மற்றும் பிடோக் சவுத் நிலையக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
சாங்கி கண்காட்சி நிலையத்திற்கு அருகே அமைய இருக்கும் அந்த 57 ஹெக்டர் பணிமனையில் செயல் கட்டுப்பாட்டு நிலையம் அமைந்து இருக்கும். குறுக்குத் தீவு வழித்தடத்தில் ஓடவிருக்கும் 70 ரயில் வண்டிகள் அங்குதான் பராமரிக்கப்படும்.
அவற்றுக்கு அந்தப் பணிமனை இடமளிக்கும். கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு பிற்பகுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறுக்குத் தீவு வழித்தடத்தின் முதல் கட்டத்தின்கீழ் இந்தப் பணிமனை அமையும்.
லோயாங், தெம்பனிஸ், பாசிர் ரிஸ், ஹவ்காங், சிராங்கூன் நார்த், அங் மோ கியோ ஆகியவற்றில் உள்ள குடியிருப்பு, தொழில்துறை பகுதிகளுக்கு இது சேவையாற்றும்.
பணிகளை 2030ல் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

