மலேசியாவுடன் சிங்கப்பூர் அணுக்கமாக செயல்படும்
கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த மேலும் கடுமையான நடவடிக்கைகள் அமலாகும் என்று மலேசியா அறிவித்து உள்ளது. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து சென்று வருவதை உறுதிப்படுத்த சிங்கப்பூர் அந்த நாட்டுடன் தொடர்ந்து அணுக்கமாகச் செயல்படும்.
வரத்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங் இவ்வாறு தெரிவித்தார். என்டியுசி ஃபேர்பிரைஸ் பினாய் விநியோக நிலையத்திற்குச் சென்றிருந்தபோது அமைச்சர் இவ்வாறு கூறியதாக இந்த அமைச்சு நேற்று ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
கொவிட்-19 விதிமீறல்: விசாரணையில் 38 பேர்
சிங்கப்பூரில் இப்போது நடப்பில் இருக்கும் கொவிட்-19 சமூகப் பாதுகாப்பு இடைவெளி நிபந்தனையை மீறி சட்டவிரோத பொதுப் பொழுதுபோக்கு இடம் ஒன்றில் கலந்துறவாடி, மதுபானம் குடித்ததாகக் கூறப்பட்டதன் தொடர்பில் மொத்தம் 38 பேர் விசாரிக்கப்படுகிறார்கள்.
அவர்களில் பதின்ம வயதினர் பலரும் அடங்குவர். ஜாலான் புசாரில் உள்ள தொழில்துறைக் கட்டடம் ஒன்றில் மே 16ஆம் தேதியும் பாய லேபார் ரோட்டில் இருக்கும் அலுவலகம் ஒன்றில் மே 22ஆம் தேதியும் அதிகாரிகள் தனித்தனியாக சோதனை நடத்தியதில் அவர்கள் பிடிபட்டதாக நேற்று அறிக்கையில் போலிஸ் தெரிவித்தது.
10 ஆண்டுகளில் இல்லாத அளவு சிறார் கொடுமை சம்பவங்கள்
சிங்கப்பூரில் சென்ற ஆண்டில் அதிகாரிகள் விசாரித்த சிறார் கொடுமை சம்பவங்களின் எண்ணிக்கை பத்தாண்டுகளில் ஆக அதிகமாக இருந்தது. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் புள்ளிவிவரங்கள் மூலம் இது தெரியவருகிறது.
எளிதில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களில் தொற்று காரணமாக பிரச்சினைகள் கூடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்தன.
சிறார் கொடுமை தடுப்புச் சேவை அமைப்பு, சென்ற ஆண்டில் இத்தகைய 1,313 சம்பவங்கள் பற்றி புலன்விசாரணை நடத்தியது. இந்த எண்ணிக்கை 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20.7% அதிகம் என்பது தெரியவந்தது. இந்தக் கொடுமைகளில் உடல் ரீதியில் துன்புறுத்திய சம்பவங்கள்தான் அதிகம் (677).
ஆசியான் இளையர்கள் இருநாள் மெய்நிகர் மாநாடு தொடக்கம்
ஆசியானில் அங்கம் வகிக்கும் 10 நாடு களைச் சேர்ந்த 18 முதல் 35 வரை வயதுள்ள 220 பேருக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்கள் முதலாவது இரண்டு நாள் மெய்நிகர் மாநாட்டை நேற்றுத் தொடங்கினர்.
ஜாமியா சிங்கப்பூர் என்ற தொண்டூழிய நல்வாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் நடக்கும் அந்த நிகழ்ச்சியில் ஆசியான் இளையர்கள் தாங்கள் விருப்பப்படி விவாதத் தலைப்புகளை முடிவு செய்யலாம் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர். கொவிட்-19 சூழலில் சமூகப் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
தொடக்க நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஓஸ்மான், கொவிட்-19 தொற்று காரணமாக ஆசியான் முன் ஒருபோதும் சந்தித்திராத சவால்களை எதிர்நோக்குவதாகத் தெரிவித்தார்.
மோசடி எண்களை தடுத்த செயலி
மோசடியான தொலைபேசி அழைப்புகளும் குறுஞ்செய்தி களும் பயனீட்டாளர்களுக்குச் செல்வதைத் தடுப்பதற்காக 'ஸ்கேம்ஷீல்டு' என்ற செயலி கடந்த நவம்பரில் தொடங்கப் பட்டது. அதை தேசிய குற்றத் தடுப்பு மன்றமும் சிங்கப்பூர் போலிசும் நிர்வகித்து வருகின்றன.
அந்தச் செயலியை 119,000 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். மோசடிகளில் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக நம்பப்படும் 5.500க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களை அந்தச் செயலி தடுத்துவிட்டது.
அச்செயலியைப் பயன்படுத்தி இதுவரை ஏறத்தாழ 722,000 குறுஞ்செய்திகள் பற்றிய புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

