கனவாகிப்போன கனவுகள்; கொரோனா பிடியிலிருந்து மீண்ட ஊழியருக்கு குடும்பமே மகிழ்ச்சி

கனவாகிப்போன கனவுகள்; கொரோனா பிடியிலிருந்து மீண்ட ஊழியருக்கு குடும்பமே மகிழ்ச்சி

3 mins read
b833c101-2cc9-4691-9de4-d3ecc402122e
மனைவி சஞ்சிதா அக்தர், மகன் சாஃபுவுடன் திரு ராஜு சர்க்கார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த ராஜு சர்க்கார், 40, என்பவர் பாடுபட்டு உழைக்க வேண்டும், பணம் சம்பாதிக்கவேண்டும், நாடு திரும்ப வேண்டும், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும், மனைவி பிள்ளைகளுக்கு வசதியான வாழ்வை ஏற்படுத்தித்தர வேண்டும் என்ற கனவுடன் 2019ல் சிங்கப்பூருக்கு வந்தார்.

இங்கு பாடுபட்டு உழைத்தார். ஆனால் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் அவரை கொவிட்-19 கிருமி தொற்றிவிட்டது. டான் டோக் செங் மருத்துவமனையில் தீவிர கண் காணிப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

திரு சர்க்கார் இங்கு கிசிச்சை பெற்றபோது சென்ற ஆண்டு மார்ச் மாதம் பங்ளாதேஷில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. கொஞ்சம்கொஞ்சமாக குணம் அடைந்த அவர், மருத்துவமனையில் இருந்து சென்ற ஆண்டு ஜூன் 26ல் விடுவிக்கப்பட்டார். இந்த ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி பங்ளா தேஷ் டாக்கா விமான நிலையத்தில் தரை இறங்கினார்.

2019க்குப் பிறகு முதன்முதலாக தன் மனைவியை கைக்குழந்தையுடன் கண்டார், மகிழ்ந்தார்.

திரு சர்க்கார் இப்போது பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் இருந்து 60 கிமீ தொலைவில் இருக்கும் காசிப்பூர் மாவட்டத்தில் ஹரிமால் என்ற கிராமத்தில் தன் குடும்பத்துடன் வசிக்கிறார். இந்நிலையில் மார்ச் 26 ஆம் தேதி தொலைபேசி மூலம் அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுடன் பேசினார்.

"கடுமையான பாதிப்பு காரணமாக எனக்கு உடல் அளவிலும் மன அளவிலும் தெம்பு மிகவும் குறைந்துவிட்டது. எனக்கு இப்போதெல்லாம் கனவு என்று எதுவும் கிடையாது. கொவிட்-19 காரணமாக கல்லீரல் பாதிக்கப்பட்டுவிட்டது. மருந்து உட்கொள்ளவேண்டும். 80 வயது முதியவர் செயல்படுவதைப் போன்று எச்சரிக்கையாக அன்றாட காரியங்களைச் செய்ய வேண்டிய அளவுக்கு உடல் நிலை இருக்கிறது.

"உயிரோடு காலம் தள்ளினாலே போதும் என்ற எண்ணம் வருகிறது. சாப்பாட்டில் மிகவும் கவனமாக இருந்துவரவேண்டும்.

"வேலை எதுவும் பார்க்காமல் வீட்டிலேயே சும்மா இருந்தால் தேவையற்ற மன உளைச்சல் வரும் என்பதால் காசிப்பூரில் இருக்கும் மருந்துக் கடை ஒன்றில் வாரம் ஏழு நாட்களும் அன்றாடம் காலை 7 மணி முதல் இரவு வரை காசாளராக வேலை பார்க்கிறேன்.

"அதில் நேரம் போவதே தெரியவில்லை. வீட்டிற்கு வந்து மனைவி மகனைப் பார்ப்பது புதிய தெம்பாக இருக்கிறது. நான் என் தந்தையை ஐந்து வயதிலேயே இழந்தவன். தந்தை இல்லாத குறையை அனுபவித்து உணர்ந்தவன். எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் என் பிள்ளைக்கும் அதே நிலை வந்துவிடுமே என்ற கவலை இருக்கிறது.

"இனி சிங்கப்பூருக்கு போய் வேலை பார்க்கும் அளவுக்கு உடலிலும் மனதிலும் எனக்குத் தெம்பு இல்லை. முதலாளி யாராவது இலேசான வேலை கொடுத்தாலும் சரிப்பட்டு வராது. இனி என் வாழ்க்கை என் குடும்பத்தோடுதான். "சிங்கப்பூர் அரசாங்கமும் சிங்கப்பூர் மக்களும் எனக்கும் என் குடும்பத்துக்கும் கொடுத்த ஆதரவை மறக்கவே முடியாது. அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்," என்று திரு சர்க்கார் தெரிவித்தார்.

இதனிடையே, மகன் சாஃபுவைத் தூக்கி வைத்துக்கொண்டு பேசிய திரு சர்க்காரின் மனைவியான திருமதி சஞ்சிதா அக்தர், 18, "என் கணவர் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்தபோது நான் பட்ட கவலை கொஞ்சநஞ்சமல்ல.

"இப்போது அவர் அருகில் இருக்கிறார். கணவர் நல்ல உடல் நலனுடன் இருக்கவேண்டும். இப்போது எனக்குள்ள ஒரே கவலை இதுதான்," என்றார்.