சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கின்றன.
இருந்தாலும் இந்த ஆண்டு பிஎஸ்எல்இ (தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு) மற்றும் 'ஓ' நிலை நேரடி வாய்மொழித் தேர்வுகள் நடத்தப்படும். சிங்கப்பூர் தேர்வு, மதிப்பீட்டுக் கழகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
பள்ளிக்கூடங்களில் மொழிப் பாடங்களுக்கான கற்பித்தல், கற்றல் முறைகளை ஒட்டி வாய்மொழித் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படுவதாக தான் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதிலில் இந்தக் கழகம் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த வாய்மொழித் தேர்வுகளில் மாணவர்கள் நேரடியாகக் கலந்துகொள்ள வேண்டும்.
வாய்மொழித் தேர்வு முறையில் மாற்றம் இடம்பெற்றால் மாணவர்கள் இணைய ரீதியில் தேர்வு அதிகாரிகளுடன் கலந்து செயல்படவும் நன்கு செயல்படவும் போதிய அளவுக்குத் திறம்பட ஆயத்தமாக முடியாமல் போய்விடும் என்று கழகத்தின் பேச்சாளர் ஒருவர் விளக்கிக் கூறினார்.
"வாய்மொழித் தேர்வில் தேர்வு அதிகாரிகள் மாணவர்களை நேரடியாக சந்தித்து உரையாடுகிறார்கள். இதனால் மாணவர்களை அவர்கள் அணுக்கமாகக் கண்காணிக்க முடியும். மாணவர்களுக்குத் தேவையான ஊக்கத் தூண்டுதலையும் அவர்கள் வழங்க முடியும்," என்று பேச்சாளர் மேலும் கூறினார்.
இந்தத் தேர்வுகள் மாணவர்களுக்கும் தேர்வாளர்களுக்கும் பாதுகாப்பாக நடக்கும் வகையில் பள்ளிக்கூடங்களுடன் சேர்ந்து சமூக இடைவெளியை உறுதிப்படுத்தப்போவதாக கழகம் குறிப்பிட்டது.
மாணவர்- தேர்வாளர் இருவருக்கும் இடையில் கண்ணாடித் தடுப்புகள் இருக்கும். இதர பாதுகாப்பு, துப்புரவு ஏற்பாடுகளும் இடம்பெறும்.
கொவிட்- 19 நிலவரத்தை இந்தக் கழகம் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து தேர்வு ஏற்பாடுகளில் மாற்றம் செய்யவேண்டி இருந்தால் அது பற்றி அறிவிக்கும்.
'ஓ' நிலை வாய்மொழித் தேர்வு அடுத்த மாதம் தொடங்குகிறது. பிஎஸ்எல்இ வாய்மொழித் தேர்வு ஆகஸ்ட் 12ல் தொடங்குகிறது.
நடு ஆண்டு ஜிசிஇ 'ஓ' நிலை மற்றும் 'ஏ' நிலை தாய்மொழித் தேர்வுகள் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திட்டமிடப்படி நடக்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்து உள்ளது. கொரோனா சமூகத்தொற்று காரணமாக மே 19 முதல் இந்த இரண்டாவது கல்விப் பருவம் வரை மாணவர்கள் வீட்டில் இருந்தே படிக்கிறார்கள்.
நேரடி வாய்மொழித் தேர்வை பெற்றோர் வரவேற்று உள்ளனர்.
கொவிட்-19 கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும் இந்த ஆண்டு தேர்வு உண்டு

