ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் ஒரு தூண்டிலில் சிக்கிய கழுகு மீன் ஒன்றைக் காட்டும் ஒரு காணொளி மே 28 முதல் சமூக ஊடகத்தில் பரவி வருகிறது.
மூன்று நிமிடம் ஓடும் அந்தக் காணொளி, தூண்டில் முள்ளில் அந்த மீன் போராடுவதையும் அதை 10 பேர் பார்ப்பதையும் பிறகு அது கரைக்கு இழுக்கப்பட்டதையும் காட்டுகிறது. அது எப்போது படம் படிக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
ரேமண்ட் கூ என்ற ஃபேஸ்புக் புழங்கி, மே 28 ஆம் தேதி அந்தக் காணொளியைப் பதிவேற்றி இருக்கிறார். நேற்று வரை அதை ஏறத்தாழ 2,500 பேர் பார்த்தனர்.
திரு கூவுடன் தொடர்கொண்டு அது பற்றி கேட்டபோது, தன் நண்பர் அந்தக் காணொளியை அனுப்பியதாகக் கூறினார்.
அந்த மீனுக்குப் பிறகு என்ன ஆனது என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
என்றாலும் அந்தத் தூண்டில் சம்பவம் பிடோக் படகுத்துறையில் நிகழ்ந்தது என்று அவர் உறுதிபட கூறினார்.
இதனிடையே, ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த பலரும் அந்த மீன் மீண்டும் கடலில் விடப்பட்டு இருக்கும் என்று தாங்கள் நம்புவ தாகக் குறிப்பிட்டனர்.
கழுகு மீன்கள் பற்றி கருத்து தெரிவித்த சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் கடல் துறை உயிரியல் வல்லுநர் ஹுவாங் டான் வெய், சிங்கப்பூரில் மூன்று கழுகுமீன் சிற்றினங்கள் உண்டு என்றும் இப்போது காணொளியில் தெரிந்த மீன் அடிக்கடி தென்படக்கூடிய சிற்றினம் ஒன்றைச் சேர்ந்தது என்றும் தெரிவித்தார்.

