கனவாகிப்போன கனவுகள்; கொரோனா பிடியிலிருந்து மீண்ட ஊழியருக்கு குடும்பமே மகிழ்ச்சி

கனவாகிப்போன கனவுகள்; கொரோனா பிடியிலிருந்து மீண்ட ஊழியருக்கு குடும்பமே மகிழ்ச்சி

3 mins read
4f9690fb-9829-4845-9d51-fba625d276d6
மனைவி சஞ்சிதா அக்தர், மகன் சாஃபுவுடன் திரு ராஜு சர்க்­கார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பங்­ளா­தேஷ் நாட்­டைச் சேர்ந்த ராஜு சர்க்­கார், 40, என்­ப­வர் பாடு­பட்டு உழைக்க வேண்­டும், பணம் சம்­பா­திக்­க­வேண்­டும், நாடு திரும்ப வேண்­டும், சொந்­த­மாக தொழில் தொடங்க வேண்­டும், மனைவி பிள்ளைகளுக்கு வச­தி­யான வாழ்வை ஏற்படுத்­தித்தர வேண்டும் என்ற கன­வு­டன் 2019ல் சிங்­கப்­பூருக்கு வந்­தார்.

இங்கு பாடு­பட்டு உழைத்­தார். ஆனால் சென்ற ஆண்டு பிப்­ர­வரி மாதம் அவரை கொவிட்-19 கிருமி தொற்­றி­விட்­டது. டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யில் தீவிர கண் காணிப்­புப் பிரி­வில் சேர்க்­கப்­பட்டு சிகிச்சை பெற்­றார்.

திரு சர்க்­கார் இங்கு கிசிச்சை பெற்­ற­போது சென்ற ஆண்டு மார்ச் மாதம் பங்­ளா­தே­ஷில் அவ­ருக்கு ஆண் குழந்தை பிறந்­தது.

கொஞ்­சம்­கொஞ்ச­மாக குணம் அடைந்த அவர், மருத்­துவமனை­யில் இருந்து சென்ற ஆண்டு ஜூன் 26ல் விடு­வி­க்கப்­பட்­டார். இந்த ஆண்டு மார்ச் 18 ஆம்­ தேதி பங்ளா தேஷ் டாக்கா விமான நிலை­யத்தில் தரை இறங்­கி­னார்.

2019க்குப் பிறகு முதன்முத­லாக தன் மனை­வியை கைக்குழந்­தை­யு­டன் கண்­டார், மகிழ்ந்­தார்.

திரு சர்க்­கார் இப்­போது பங்­ளா­தேஷ் தலை­ந­கர் டாக்­கா­வில் இருந்து 60 கிமீ தொலை­வில் இருக்­கும் காசிப்­பூர் மாவட்­டத்­தில் ஹரி­மால் என்ற கிரா­மத்­தில் தன் குடும்­பத்­து­டன் வசிக்­கி­றார். இந்­நி­லை­யில் மார்ச் 26 ஆம்­ தேதி தொலை­பேசி மூலம் அவர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளு­டன் பேசி­னார்.

"கடு­மை­யான பாதிப்பு கார­ண­மாக எனக்கு உடல் அள­வி­லும் மன அள­வி­லும் தெம்பு மிக­வும் குறைந்துவிட்­டது. எனக்கு இப்­போ­தெல்­லாம் கனவு என்று எது­வும் கிடை­யாது. கொவிட்-19 கார­ண­மாக கல்­லீ­ரல் பாதிக்­கப்­பட்டுவிட்­டது. மருந்து உட்­கொள்­ள­வேண்­டும். 80 வயது முதி­ய­வர் செயல்­படு­வ­தைப் போன்று எச்­ச­ரிக்­கை­யாக அன்­றாட காரி­யங்­க­ளைச் செய்ய வேண்­டிய அள­வுக்கு உடல் நிலை இருக்­கிறது.

"உயி­ரோடு காலம் தள்­ளி­னாலே போதும்­ என்ற எண்­ணம் வரு­கிறது. சாப்­பாட்­டில் மிக­வும் கவ­ன­மாக இருந்­து­வ­ர­வேண்­டும்.

"வேலை எது­வும் பார்க்­கா­மல் வீட்­டி­லேயே சும்மா இருந்­தால் தேவை­யற்ற மன உளைச்சல் வரும் என்­ப­தால் காசிப்­பூரில் இருக்­கும் மருந்­துக் கடை ஒன்­றில் வாரம் ஏழு நாட்­களும் அன்­றா­டம் காலை 7 மணி முதல் இரவு வரை காசா­ள­ராக வேலை பார்க்­கி­றேன்.

"அதில் நேரம் போவதே தெரி­ய­வில்லை. வீட்­டிற்கு வந்து மனைவி மக­னைப் பார்ப்­பது புதிய தெம்­பாக இருக்­கிறது. நான் என் தந்­தையை ஐந்து வய­தி­லேயே இழந்­த­வன். தந்தை இல்­லாத குறையை அனு­ப­வித்து உணர்ந்­த­வன். எனக்கு ஏதா­வது ஆகி­விட்­டால் என் பிள்ளைக்கும் அதே நிலை வந்­து­விடுமே என்ற கவலை இருக்­கிறது.

"இனி சிங்­கப்­பூ­ருக்கு போய் வேலை பார்க்­கும் அள­வுக்கு உட­லி­லும் மன­தி­லும் எனக்­குத் தெம்பு இல்லை. முத­லாளி யாரா­வது இலே­சான வேலை கொடுத்­தா­லும் சரிப்­பட்டு வராது. இனி என் வாழ்க்கை என் குடும்­பத்­தோ­டு­தான்.

"சிங்­கப்­பூர் அர­சாங்­க­மும் சிங்­கப்­பூர் மக்­களும் எனக்­கும் என் குடும்­பத்­துக்­கும் கொடுத்த ஆத­ரவை மறக்­கவே முடியாது. அவர்­களுக்கு நன்றி கூறு­கி­றேன்," என்று திரு சர்க்­கார் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, மகன் சாஃபுவைத் தூக்கி வைத்­துக்கொண்டு பேசிய திரு சர்க்­கா­ரின் மனை­வி­யான திரு­மதி சஞ்­சிதா அக்­தர், 18, "என் கண­வர் சிங்­கப்­பூ­ரில் சிகிச்சை பெற்று வந்­த­போது நான் பட்ட கவலை கொஞ்­ச­நஞ்­ச­மல்ல.

"இப்­போது அவர் அரு­கில் இருக்­கி­றார். கண­வர் நல்ல உடல் நல­னு­டன் இருக்­க­வேண்­டும். இப்­போது எனக்­குள்ள ஒரே கவலை இது­தான்," என்­றார்.