பொருட்களைக் கொண்டு கொடுக்கும் விநியோக ஊழியர்களுக்கும் வாடகை கார் ஓட்டுநர்களுக்கும் வசதியை ஏற்படுத்தித் தரும் வகையில் பொங்கோலில் உள்ள இரண்டு காப்பி கடைகளில் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஓய்விடங்கள் அமைக்கப்பட்டன.
ஆனால் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடும் என்ற காரணத்தால் அவை அகற்றப்படுகின்றன.
அந்த இடங்கள் மக்கள் சேர்ந்து புழங்கக்கூடிய இடங்களாக ஆகிவிட முடியும் என்பதால் சமூகத்தில் கிருமித்தொற்று ஆபத்துக்கு வழி ஏற்பட்டுவிடும் என்று பொங்கோல் வெஸ்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி சுன் சியூலிங் நேற்று ஃபேஸ்புக்கில் கூறினார்.
"அங்கு சில முறை சென்றேன். ஊழியர்கள் பலரும் அங்கு திரண்டு இருந்ததைப் பார்த்தேன். இதைச் சரிப்படுத்த வேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.
திருவாட்டி சுன், கல்வி மற்றும் சமுதாய, குடும்ப துணை அமைச்சருமாவார்.
பொங்கோல் வாக்கில் உள்ள புளோக் 308சி மற்றும் பொங்கோல் ஃபீல்டில் இருக்கும் புளோக் 269ஏ ஆகியவற்றில் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஓய்வு இடங்கள் அமைக்கப்பட்டன.
பொருட்களைக் கொண்டு கொடுக்கும் விநியோக ஊழியர்களும் வாடகை கார் ஓட்டுநர்களும் அந்த இடங்களில் கொஞ்ச நேரம் இளைப்பாறலாம். சாப்பிடலாம் என்று முன்னதாக திருவாட்டி சுன் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டு இருந்தார்.
அவர்கள் வெற்றுத் தளங்கள் பூங்காக்கள் போன்ற திறந்த இடங்களில் சாப்பிட முடியும் என்று நேற்று தெரிவித்த அவர், அவர்களில் சிலர் அத்தகைய இடங்களில் தனியாக இளைப்பாறியதை தான் கண்டதாகவும் கூறினார்.
இத்தகைய இடங்கள் பாதுகாப்பானவை. கூட்டம் இல்லாதவை என்றும் திருவாட்டி சுன் கூறிப்பிட்டார்.
இதனிடைேய, விநியோக ஊழியர்களுக்கும் வாடகைக் கார் ஓட்டுநர்களுக்கும் உதவும் ஒரு செயல்திட்டம் அந்த இரண்டு பொங்கோல் காப்பிக்கடைகளிலும் தொடர்ந்து நடப்பில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதன்படி ஓட்டுநர்களும் ஊழியர்களும் கையில் இருந்து காசு கொடுக்காமல் கடைகளில் பானம் வாங்கிக் குடிக்கலாம்.
அந்த ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து, அவர்களுக்கு முகக்கவசத்தை அன்பளிப்பாகக் கொடுக்கும் வகையில் அங்கு ஒரு பெட்டியும் வைக்கப்பட்டுள்ளதாகவும் திருவாட்டி சுன் குறிப்பிட்டார்.

