சிங்கப்பூரில் கர்ப்பிணிகள் ஜூன் 4 ஆம் தேதி முதல் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பதியலாம். கர்ப்பிணி பெண்களுடன் தீவிர சிகிச்சையில் இருக்கும் புற்றுநோயாளிகளும் தடுப்பூசி போட்டுக்கொள்ள இயலும் என்று கொவிட்-19 சிறப்புப் பணிக் குழு நேற்று தெரிவித்தது.
சிங்கப்பூரிலும் உலக அளவிலும் அதிக மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருவதை அந்தக் குழு சுட்டியது.
கொரோனா கிருமித்தொற்றைத் தடுப்பதில் தடுப்பூசி ஆற்றலுடன் செயல்படுகிறது என்பது தெரியவந்து உள்ளதாகவும் பல அமைச்சுகளை உள்ளடக்கிய அந்தக் குழு கூறியது. உலகம் முழுவதிலும் இடம்பெறும் நிலவரங்களையும் சாட்சியங்களையும் கொவிட்-19 தடுப்பூசி வல்லுநர்ககள் குழு அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.
குறிப்பிட்ட வயதுள்ளவர்களுக்குத் தடுப்பூசி போடுவது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை அது திருத்தி இருக்கிறது.
தடுப்பூசிக்குத் தகுதி பெரும் பட்சத்தில் கர்ப்பிணிகள் தடுப்பூசிக்கு ஜூன் 4 முதல் பதியலாம் என்று குழு அறிவித்தது.
இருந்தாலும் அவர்கள் தங்கள் மருத்துவர்களை அணுகி தடுப்பூசி தொடர்பிலான சாதகங்களை, பாதகங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்டுள்ள ஃபைசர் பயோஎன்டெக், மொடர்னா ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் கர்ப்பிணிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரம் இப்போது எதுவும் இல்லை என்று குழு தெரிவித்தது.
இருந்தாலும் அவர்கள் தொடர்பில் கிடைத்துள்ள தகவல்கள் இன்னமும் கொஞ்சமாகவே இருக்கின்றன என்பதை அது சுட்டியது.
தாய்ப்பால் கொடுக்கும் மாதர்களும் தடுப்பூசிக்கு போட்டுக் கொள்ளலாம் என்றும் ஊசி போட்டுக்கொண்ட பிறகு அவர்கள் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம் என்றும் அது கூறியது.
இதனிடையே, தீவிர சிகிச்சை பெற்றுவரும் புற்றுநோயாளிகளும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும், இருந்தாலும் மருத்துவமனைகளில்தான் அவர்கள் ஊசி போட்டுக்கொள்ள வேண்டும்.
அதற்கு முன்னதாக அவர்களுக்கு ஊசி போடலாமா என்பது பற்றி மருத்துவர்கள் முடிவு செய்ய வேண்டும்.
இப்போதைய வழிகாட்டி நெறிமுறைகளின்படி ஹார்மோன் சிகிச்சை பெறுகின்ற புற்றுநோயாளிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். புற்றுநோய் காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொவிட்-19 காரணமாக இவர்களுக்கு ஏற்படகூடிய ஆபத்துகள் அதிகம் என்பதைச் சிறப்புப் பணிக் குழு சுட்டியது.
இதர வகை தடுப்பூசிகள் பற்றிய விவரங்களையும் அவை யாருக்குப் பொருந்தும் என்பதையும் குழு தொடர்ந்து பரிசீலித்துவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

