சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்கள் அளவைக் கூடுமான அளவுக்கு வேகமாக அதிகரிக்க வகை செய்யும் முயற்சிகளை ஒட்டி சிறப்பு வழி ஏற்பாடு மூலம் இதர வகை கொவிட்-19 தடுப்பூசிகள் இங்கு வர சுகாதார அமைச்சு அனுமதிக்கும்.
ஜான்சன் அண்ட் ஜான்சன், ஆக்ஸ்போர்ட் ஆஸ்ட்ராஸெனகா, சினோஃபாம் ஆகியவை இந்த இதர ஊசி மருந்துகளில் அடங்கும். தனியார் சுகாதாரப் பராமரிப்பு துறை மூலம் அவை பெறப்படும்.
சிறப்பு வழி ஏற்பாடு என்பது பதிவு செய்யப்படாத மருந்துகளை இறக்குமதி செய்து விநியோகிக்க அனுமதிக்கும் இப்போதைய நடைமுறையாகும். சிங்கப்பூரில் இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிக்கு சுகாதார அமைச்சு இப்போது அங்கீகாரம் வழங்கி இருக்கிறது.
ஃபைசர் பயோஎன்டெக், மொடர்னா ஆகிய அந்த இரண்டு ஊசி மருந்தும் தேசிய தடுப்பூசித் திட்டத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு மருத்துவக் காரணங்களுக்காக சிலர் இந்தத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள முடியவில்லை.
உலக சுகாதார நிறுவனம் அவசர உதவிப் பட்டியலில் அங்கீகரித்துள்ள கொவிட்-19 தடுப்பூசி மருந்துகள் இங்கு கிடைக்க இந்த சிறப்பு வழி ஏற்பாட்டைப் பயன்படுத்த அதிகாரிகள் அனுமதி வழங்குவார்கள்.
இந்தத் தடுப்பூசிகளை உலக சுகாதார நிறுவனம் அங்கீரித்துள்ள நெறிமுறைகளின்படி, யாருக்குப் பொருத்தமோ அவர்களுக்குப் பயன் படுத்த வேண்டும்.
தடுப்பூசி பட்டியலில் இடம்பெற்றதும் அந்த மருந்தை உரிமம் பெற்ற தனியார் சுகாதார பராமரிப்பு நிறுவனம் இங்கு கொண்டுவந்து தனிப்பட்டவர்களுக்குப் போடலாம் என்று சிறப்புப் பணிக்குழுவின் தலைவர்களில் ஒருவரான சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
உலக சுகாதார நிறுவனத்தின் பட்டியலில் சினோவாக் தடுப்பூசி இடம்பெற்றால் அதைப் பயன்படுத்தலாம். சிங்கப்பூருக்கு இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தத் தடுப்பூசி வந்தது.
உலக சுகாதார நிறுவனம் தனது அவசர பயனீட்டுப் பட்டியலில் சினோவாக் மருந்தைச் சேர்த்தால் அதைத் தருவிக்க அனுமதிக்கும்படி கேட்டு உரிமம் பெற்றுள்ள சுகாதார பராமரிப்பு நிறுவனம் அமைச்சுக்குக் கோரிக்கை விடுக்கலாம்.
இப்போது கைவசம் உள்ள 200,000 குப்பி தடுப்பூசி மருந்தை விரும்புவோருக்குப் போடலாம் என்று அமைச்சர் கூறினார்.
சிறப்பு வழி ஏற்பாட்டைப் பயன்படுத்தி பதியப்படாத தடுப்பூசி மருந்தை கொண்டுவருவது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். இந்த ஏற்பாட்டின் கீழ் போடப்படும் தடுப்பூசிக்கு அரசாங்கம் மானியம் கொடுக்காது.
இதன்படி ஊசி போட்டுக்கொள்வோருக்குப் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் அவர்கள் அரசாங்கத்தின் தடுப்பூசி பாதிப்பு நிதி உதவிச் செயல்திட்டத்தின்கீழ் இழப்பீடு எதையும் கோர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

