சிங்கப்பூரில் 60 வயதைக் கடந்த முதியோர் எந்த ஒரு கொவிட்-19 தடுப்பூசி நிலையத்திற்கும் சென்று உடனே ஊசி போட்டுக்கொள்ளலாம் என்று பிதரமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளனார்.
இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத முதியோருக்குச் சிறப்புச் சலுகையாக தான் இதை அறிவிப்பதாக அவர் கூறினார்.
அந்த வயதுப் பிரிவினரைப் பொறுத்தவரை முன்பதிவு தேவைஇல்லை என்றார் பிரதமர்.
"உங்களுக்கு மேலும் வசதி செய்து தருகிறோம். தடுப்பூசி நிலையத்திற்கு நேரே போய் உடனே நீங்கள் ஊசி போட்டுக்கொள்ளலாம்," என்று பிரதமர் திரு லீ கூறினார்.
சிங்கப்பூரின் கொவிட்-19 நிலவரம் பற்றி பிரதமர் நேற்று தொலைக்காட்சியில் பேசினார்.
சிங்கப்பூரில் தடுப்பூசி இயக்கத்தை வேகப்படுத்துவதற்கான முயற்சிகள் பற்றி அப்போது அவர் குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அடுத்த கட்ட முயற்சிகளை பிரதமர் தமது உரையில் விவரித்தார்.
தடுப்பூசிக்கு முதியவர்கள் அளித்துவரும் ஆதரவு சிறப்பாக உள்ளது என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரில் 60 வயதுக்கும் மேற்பட்ட வயதுள்ள 760,000 மூத்த குடிமக்களில் ஏறத்தாழ முக்கால் வாசிப்பேர் குறைந்தபட்சம் ஒரு முறை ஊசி போட்டுக்கொண்டுள்ளனர் அல்லது முன்பதிவு செய்துள்ளனர் என்று திரு லீ தெரிவித்தார்.
இருந்தாலும் 280,000 பேர் ஊசி போட்டுக்கொள்ள இன்னமும் பதியவில்லை.
கூடியவிரைவில் ஊசி போட்டுக்கொள்ளும்படி அவர்களை வலியுறுத்திய திரு லீ, "அதிபரும் நானும் அமைச்சரவை சகாக்கள் அனைவரும் உங்கள் வயதுப் பிரிவிலுள்ள பெரும்பாலானவர்களும் ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளோம். தடுப்பூசி பாதுகாப்பானது, அது உங்களைக் காக்கும்," என்றார் பிரதமர்.
இந்த வயதுப் பிரிவினரில் நடமாட முடியாதவர்கள், தடுப்பூசி நிலையத்திற்குச் செல்ல இயலாதவர்கள் யாரேனும் இருந்தால் வீட்டிற்கு வந்து ஊசி போடுமாறு அவர்கள் அதிகாரிகளைக் கேட்டுக்கொள்ளலாம். ஊசி போட்டுக்கொள்ள முதியவர்களை ஊக்கமூட்டும்படி அவர்களின் உறவினர்களை, நண்பர்களைப் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

